உண்மைச் சரிபார்ப்புகளும்
2024 டிசம்பரில் இலங்கையின் இறக்குமதிச் செலவினங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான காலப்பகுதியை விட அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் வாகன இறக்குமதிகளை மீண்டும் ஆரம்பிப்பது “ஓரளவு ஆபத்தானது” எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது. முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களுடன் இந்தத் தரவு பொருந்துகின்றது.
கூற்றையும் வாதத்தையும் மதிப்பிடுவதற்கு டிசம்பர் 2024 தரவை முந்தைய பத்தாண்டுகளின் (2015 – 2024) மாதாந்தப் தரவுகளுடன் FactCheck.lk ஒப்பிட்டது. ஆய்வின் பிரகாரம் 120 மாதங்களில்:
- 2024 டிசம்பரை விட 8 மாதங்கள் அதிக இறக்குமதியைக் கொண்டிருந்தன, இவற்றில் 5 மாதங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையவை ஆகும் (2020 ஆம் ஆண்டுக்கு முன்னர்).
- 23 மாதங்கள் அதிக வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தன, இவற்றில் 18 மாதங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையவை ஆகும்.
எனவே இறக்குமதிகளும் வர்த்தகப் பற்றாக்குறையும் கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான காலப்பகுதியை விட அதிகமாக உள்ளது என்ற கூற்று தவறானதாகும்.
தற்போதைய இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறைப் பெறுமதிகள் வாகன இறக்குமதிகளை மீண்டும் தொடங்குவது குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றதா என்பதை மதிப்பிடுவதற்கு, கடந்த கால வர்த்தகப் பெறுமதிகளிலிருந்து வாகன இறக்குமதிகளைக் கழித்து FactCheck.lk ஆராய்ந்தது. ஏனெனில் தற்போதைய பெறுமதிகள் கட்டுப்பாடுகள் இருந்தபோது பெறப்பட்டவை ஆகும். பின்னர் அதே காலப்பகுதியில்:
- 2015 ஆம் ஆண்டு முதல், 2024 டிசம்பரை விட 4 மாதங்கள் அதிக இறக்குமதிகளைக் கொண்டுள்ளன, இதில் ஒரு மாதம் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையது ஆகும்.
- 2015 ஆம் ஆண்டு முதல், 12 மாதங்கள் (10%) வர்த்தகப் பற்றாக்குறையை அதிகம் கொண்டுள்ளன, இவற்றில் 8 மாதங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையவை ஆகும்.
இந்தக் கூற்றிலிருந்து கட்டமைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், தரவுகளைப் பொறுத்தவரை வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது ‘ஓரளவு ஆபத்தானது’. வாகன இறக்குமதி பெறுமதிகளை கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான தரவிலிருந்து கழிக்கும்போது (ஜனவரி 2015 முதல் டிசம்பவர் 2019 வரையான 60 மாதங்கள்), டிசம்பர் 2024 இறக்குமதிகள் முதல் 2 சதவீதத்திலும் வர்த்தகப் பற்றாக்குறைகள் முதல் 13 சதவீதத்திலும் உள்ளன.
எனவே தரவு குறித்த எளிமையான கூற்று தவறானது என்ற போதிலும் ‘ஓரளவு’ ஆபத்தானது என்ற வாதம் இறக்குமதிகள் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறைகளின் கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான புள்ளிவிபரங்களுடன் கடந்த கால வாகன இறக்குமதிகளைக் கழிக்கும்போது கிடைக்கும் தரவினால் ஆதரிக்கப்படுகின்றது.
எனவ முன்னாள் ஜனாதிபதி ஆலோசகரின் கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
கூடுதல் குறிப்பு: பணவீக்கம் சரிசெய்யப்பட்ட பெறுமதிகள் மிகவும் துல்லியமான ஒப்பீட்டைத் தருகின்றன. ஏனெனில் 2019 முதல் 2024 வரையான USD பணவீக்கம் (அமெரிக்காவின் GDP பணவீக்க குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது) வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பெயரளவு மதிப்பை சுமார் 20% அதிகரித்துள்ளது. 2015 முதல், உண்மையான இறக்குமதிகள் (வாகன இறக்குமதிகளைத் தவிர்த்து) 2024 டிசம்பர் மாதத்தை விட 53 மாதங்கள் (44%) அதிகமாக இருந்தன. அவற்றில் 44 மாதங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையவை ஆகும். வர்த்தகப் பற்றாக்குறை (வாகன இறக்குமதிகளைத் தவிர்த்து) 2024 டிசம்பர் மாதத்தை விட 42 மாதங்கள் (35%) அதிகமாக இருந்தன, அவற்றில் 33 மாதங்கள் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தையவை ஆகும்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
External Sector, Central Bank of Sri Lanka. https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector