மின் கட்டண அதிகரிப்பு மற்றும் உணவுக் குறைப்பு தொடர்பில் வீரவங்ச தவறாகக் கருத்து வெளியிட்டுள்ளார்

"

[சனத்தொகையில்] 24.5 சதவீதமானவர்கள் அதாவது நான்கில் ஒரு பங்கினர் வறுமையில் வாடுகின்ற, மற்றும் 51 சதவீதமானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை மட்டுமே உண்டு திருப்தியடைகின்ற நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இந்த 15% அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. […] மின் கட்டணத்தில் இவ்வாறான உயர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்பட

விமல் வீரவங்ச யூடியூப் பக்கம் | ஜூன் 26, 2025

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இரண்டு கூற்றுக்களை முன்வைக்கின்றார்: (1) இலங்கையில் வறுமை மோசமாக உள்ளது, சனத்தொகையில் 24.5 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றார்கள். அத்துடன் 51 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவை மட்டுமே உண்கின்றார்கள். (2) அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இந்த வறுமையை மேலும் மோசமாக்குவதுடன் இரண்டு வேளை உணவு உட்கொள்ளும் 51 சதவீதமானவர்களை நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்பவர்களாக மாற்றும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வறுமை மற்றும் உணவுக் குறைப்பு தொடர்பான புள்ளிவிபரங்களைச் சரியாகக் குறிப்பிடுகின்றாரா?

இலங்கை அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு முதல் வறுமை விகிதம் குறித்த உத்தியோகபூர்வ மதிப்பீட்டை வெளியிடவில்லை. உலக வங்கி நுண் மாதிரி கணிப்புகளைப் பயன்படுத்தி பல்வேறு வறுமை அளவுகோல்களுக்கு உத்தியோகபூர்வமற்ற மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் சனத்தொகையில் 24.5 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 3.65 ஐ.அ.டொலரை விட குறைவான வருமானத்தைப் பெறுவார்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்தப் பெறுமதியே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). எனினும் உத்தியோகபூர்வமாகக் கணக்கிடப்படும் தேசிய வறுமைக் கோட்டுடன் ஒப்பிடும்போது உலக வங்கியின் முறை குறைந்த பெறுமதியை (ஏழை அல்லாதவர்கள் என வகைப்படுத்துகின்றது) காட்டுகின்றது. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில் உலக வங்கியால் மதிப்பிடப்பட்ட வறுமை 11.3 சதவீதமாக இருந்தபோது உத்தியோகபூர்வ பெறுமதி 14.3 சதவீதமாக இருந்தது.

டிசம்பர் 2024 இல் நடத்தப்பட்ட, குடும்பங்கள் பின்பற்றும் உணவை அடிப்படையாகக் கொண்ட ஐந்து சமாளிக்கும் உத்திகள் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகள் HFSS-WFP இல் அறிக்கையிடப்பட்டுள்ளன.  உணவு வேளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒரு உத்தியாக உள்ளதுடன், 13% குடும்பங்கள் இதனைப் பின்பற்றுகின்றன. எனவே 51 சதவீதமானவர்கள் உணவு வேளையைக் குறைக்கின்றனர் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று தவறாகும். உணவு வேளையைக் குறைப்பது மட்டும் அன்றி, ஏதேனும் ஒரு உணவு தொடர்பான சமாளிக்கும் உத்தியைப் பின்பற்றும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையை அது குறிப்பிட வேண்டும். ஏனைய உத்திகளில் அதிகம் விரும்பப்படாத/செலவு குறைந்த உணவில் தங்கியிருத்தல், உணவின் அளவை மட்டுப்படுத்துதல், உணவைக் கடன் வாங்குதல் மற்றும் வளர்ந்தவர்கள் உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். உணவை அடிப்படையாகக் கொண்ட ஏதேனும் ஒரு சமாளிக்கும் உத்தியைப் பயன்படுத்தும் ஒட்டுமொத்த 51 சதவீதமானவர்களை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உணவு வேளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பவர்கள் எனத் தவறாகக் குறிப்பிடுவதாகத் தெரிகின்றது.

 

மின் கட்டண அதிகரிப்பால் உணவு நுகர்வில் ஏற்படும் தாக்கம் என்ன?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றை மதிப்பிடுவதற்கு, வறுமையில் வாடுபவர்களிடம் மின் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை FactCheck.lk ஆராய்ந்தது.

மே 2025 நிலவரப்படி, 59 சதவீதமான குடும்பங்கள் மாதம் ஒன்றுக்கு 60 அலகுகளை விடக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும், 29 சதவீதமான குடும்பங்கள் மாதாந்தம் 30 அலகுகளை விடக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் இலங்கை மின்சார சபையின் தரவு காட்டுகின்றது.

வறுமையானது குறைவான மின்சாரப் பாவனையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச்சின் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்). எனவே உணவு வேளையைக் குறைப்பதாக அடையாளம் காணப்பட்ட 13 சதவீதமான குடும்பங்கள் பெரும்பாலும் மாதம் ஒன்றுக்கு 30 அல்லது 60 அலகுகளை விட குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் குழுக்களாக இருக்கும்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் 30 அலகுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாதாந்தக் கட்டணத்தில் ரூ.20 (நாள் ஒன்றுக்கு ரூ.0.67) அதிகரிக்கும். மாதம் 60 அலகுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.85 (நாள் ஒன்றுக்கு ரூ.2.83) அதிகரிக்கும். மின் கட்டணத்தில் நாளொன்றுக்கு ஏற்படும் இந்த 1 – 3 ரூபாய் அதிகரிப்பு என்பது குடும்பம் ஒன்றின் உணவு வாங்கும் திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிதாக இல்லை.

மொத்தத்தில், கூற்று 1 ஐப் பொறுத்தவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வறுமை தொடர்பில் உலக வங்கியின் மதிப்பீடுகளை சரியாக மேற்கோள் காட்டினாலும் HFSS-WFP அறிக்கையின் தரவுகளை தவறாகப் புரிந்துகொண்டு வறுமை நிலையை மிகைப்படுத்துகின்றார். முதலாவது கூற்றில் அவர் செய்த தவறு எதுவாக இருந்தாலும், அவரின் இரண்டாவது கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது: இது ஒரு முழு குடும்பத்தின் ஒரு வேளைக்கான உணவுக்கான செலவு 1-3 ரூபாய் எனக் கூறுவதற்குச் சமமாகும்.

எனவே நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை முற்றிலும் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

உலக வங்கி குழு, இலங்கை அபிவிருத்தி புதுப்பிப்பு 2025. (ஏப்ரல் 2025) https://www.worldbank.org/en/country/srilanka/publication/sri-lanka-development-update-2025

உலக வங்கி வறுமை மற்றும் சமத்துவச் சுருக்கம், ஏப்ரல் 2023.  https://databankfiles.worldbank.org/public/ddpext_download/poverty/987B9C90-CB9F-4D93-AE8C-750588BF00QA/current/Global_POVEQ_LKA.pdf மூலம் அணுகப்பட்டது.

 

உலக உணவுத் திட்டம், வீட்டு உணவுப் பாதுகாப்பு கணக்கெடுப்பு – டிசம்பர் 2024 – இலங்கை. https://www.wfp.org/publications/household-food-security-surveys-sri-lanka மூலம் அணுகப்பட்டது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2019. குடும்ப வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு இறுதி அறிக்கை.  http://www.statistics.gov.lk/IncomeAndExpenditure/StaticalInformation/HouseholdIncomeandExpenditureSurvey2019FinalReportமூலம் அணுகப்பட்டது.

 

வெரிட்டே ரிசேர்ச் இலங்கை கொள்கைக் குழு. ‘உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் காணுதல்: மின் பாவனை ஒரு சிறந்த முறை’. (ஜுலை 2022).

https://www.veriteresearch.org/wp-content/uploads/2023/12/VR_EN_BN_Jul2022_Targeting-Assistance-Electricity-Consumption-is-a-Superior-Method.pdf மூலம் அணுகப்பட்டது.

 

இலங்கை மின்சார சபை. (மே 2025).

https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2025/05/2025-05-21-Frm-CEB_Responses-to-information-requested-on-tariff-submission.pdf  மூலம் அணுகப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன