உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையின் பாதுகாப்புத் துறை அதன் தொழிற்படையின் 3.47 சதவீதத்திற்கு சமமானது எனவும், இந்த விகிதம் ஏனைய பல நாடுகளை விட (அவற்றில் சில மேற்கோளில் உள்ளடக்கப்பட்டுள்ளன) அதிகம் எனவும் சன்டே லங்காதீப பத்திரிகையுடனான நேர்காணலில் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். பிராந்தியத்தில் இலங்கையின் தொழிற்படையுடன் ஒப்பிடுகையில் அதன் பாதுகாப்புத் துறை பெரியதாக உள்ளது என்ற தனது கூற்றை ஆதரிக்கும் வகையில் அவர் இந்தப் பெறுமதிகளை மேற்கோள் காட்டுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக வங்கி அபிவிருத்தி குறிகாட்டிகளின் தரவை, குறிப்பாக “ஆயுதப் படை வீரர்கள் (மொத்த தொழிற்படையின் சதவீதம்)” அளவீட்டை FactCheck.lk ஆராய்ந்தது. “பாதுகாப்பு படை” என்பதை “ஆயுதப் படை வீரர்கள்” எனவும் “தொழிற்படை” என்பதை “பணியில் உள்ளவர்கள்” எனவும் FactCheck.lk விளங்கிக் கொள்கின்றது. இது உலக வங்கி பயன்படுத்திய சொற்களுடன் ஒத்துப் போகின்றது.
தொழிற்படையின் சதவீதமாக ஆயுதப் படை வீரர்கள் குறித்து கிடைக்கும் சமீபத்திய தரவின் பிரகாரம் (2020), 215 நாடுகளில் உலகளவில் இலங்கை 11 ஆவது இடத்தில் உள்ளது. இது பேராசிரியர் குறிப்பிடும் நாடுகள் அனைத்தையும் விட இலங்கையை முன்னிலையிலும் தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கையை முதலிடத்திலும் நிலைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், இலங்கையின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் கொண்டுள்ளது. தொழிற்படைக்குப் பதிலாக தனிநபர் அளவீட்டை அடிப்படையாகக் கொண்ட முந்தைய உண்மைச் சரிபார்ப்பு ஒன்றின் அடிப்படையில்,”100 பிரஜைகளுக்கு ஆயுதப் படை வீரர்கள்” என்பதில் இலங்கை உலகளவில் 9 ஆவது இடத்தில் இருந்தது.
பேராசிரியர் குறிப்பிடும் ஏனைய நாடுகளுக்கான பெறுமதிகள் உலக வங்கி தரவுகளுடன் சரியாகப் பொருந்துகின்றன. இலங்கைக்கான தரவில் மட்டுமே வேறுபாடு காணப்படுகின்றது. பேராசிரியர் 3.47% எனக் குறிப்பிடும்போதும் உலக வங்கியின் தரவு 3.74% எனக் குறிப்பிடுகின்றது. இந்த வேறுபாடு இடமாற்றப் பிழையாக இருக்க வேண்டும் (74 என்பதை மாற்றி 47 எனக் குறிப்பிட்டிருக்கலாம்). இந்த ஒப்பீட்டுப் பெறுமதிகளை அட்டவணை 1 காட்டுகின்றது.
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், ஒப்பீட்டுக்காகப் பட்டியலிடப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழிற்படையை விட பாரிய பாதுகாப்பு படையை இலங்கை கொண்டுள்ளது என்ற பேராசிரியரின் வாதத்தை தரவுகள் ஆதரிக்கின்றன.
எனவே நாங்கள் பேராசிரியரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: தொழிற்படையின் சதவீதமாக ஆயுதப் படை வீரர்கள் (2020)
மூலம்
உலக வங்கி. (2024). ஆயுதப் படை வீரர்கள் (மொத்த தொழிற்படையின் %) [தரவு தொகுப்பு]. உலக அபிவிருத்தி குறிகாட்டிகள். https://databank.worldbank.org/reports.aspx?source=2&series=MS.MIL.TOTL.TF.ZS&country=#