உண்மைச் சரிபார்ப்புகளும்
முந்தைய பாராளுமன்றங்களுடன் ஒப்பிடும்போது இலங்கை பாராளுமன்றத்தில் தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் உயர்வாக இருந்தாலும் தெற்காசியாவில் இது தொடர்ந்து குறைந்த ஒன்றாக இருக்கின்றது என பிரதமர் அமரசூரிய குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (Inter-Parliamentary Union) ஆகியவற்றின் தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது.
பத்தாவது பாராளுமன்றத்தில் தற்போது பெண் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதமாக இருக்கின்றது என்பதைத் தரவு உறுதிப்படுத்துகின்றது. இது முந்தைய பாராளுமன்றங்களுடன் (1978 – 2024) ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் பெண் பிரதிநிதித்துவம் சராசரியாக 5.3 சதவீதமாகக் காணப்பட்டதுடன், 6.2 சதவீதத்தை விட எப்போதும் அதிகரிக்கவில்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
ஏழு தெற்காசிய நாடுகளில் (தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் இல்லை என்பதால் ஆப்கானிஸ்தான் இதில் உள்ளடக்கப்படவில்லை) பெண்களின் பிரதிநிதித்துவத்தை FactCheck.lk ஆராய்ந்தது. அட்டவணை 2 இல் காட்டப்பட்டது போன்று, ஒற்றைச் சபையைக் கொண்ட பாராளுமன்றங்கள் (இலங்கையைப் போன்றது) மற்றும் கீழ் சபைகளை ஒப்பிடும்போது இலங்கை 9.8 சதவீதத்துடன் கீழேயிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. இலங்கைக்கு கீழே மாலைதீவுகள் (3.2%) மற்றும் பூட்டான் (4.3%) உள்ளன. மீதியுள்ள நான்கு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவற்றில் பெண் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வாக உள்ளது. இலங்கையை விட ஒன்றரை முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது, இது பிராந்தியச் சராசரியை விட இலங்கையை மேலும் கீழே தள்ளியுள்ளது.
ஒருங்கிணைந்த சபைகளை (ஒற்றை மற்றும் இரட்டைச் சபைகள் ஆகிய இரண்டையும் சேர்த்தது) கருத்தில் கொள்ளும்போது இலங்கை தொடர்ந்தும் கீழேயிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளதுடன் மீண்டும் மாலைதீவுகள் மற்றும் பூட்டான் இலங்கைக்குக் கீழே உள்ளன (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்).
மொத்தத்தில் இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் இதுவரை இல்லாத அளவு பெண் பிரதிநிதித்துவத்தை அடைந்திருந்தாலும் ஏனைய தெற்காசிய நாடுகளை விட அது தொடர்ந்தும் பின்தங்கியே உள்ளது.
எனவே பிரதமரின் கூற்றைச் சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு 1: பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களை பாராளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து பெண் பிரதிநிதித்துவம் கணக்கிடப்படுகின்றது.
மேலதிகக் குறிப்பு 2: இலங்கை, மாலைதீவுகள் மற்றும் பங்களாதேஷ் தவிர ஏனைய அனைத்து தெற்காசிய நாடுகளும் இரண்டு சபைகளைக் கொண்ட பாராளுமன்றங்களைக் கொண்டவை. ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் வழிமுறையின் குறிகாட்டி 5.5.1a இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், அட்டவணை 2 இற்காக கீழ் சபைகள் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. ஏனெனில் இதில் உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுவதுடன் இலங்கை பாராளுமன்றத்திற்கு ஒத்த வகையில் வெற்றி பெறுகின்றனர்.
மேலதிகக் குறிப்பு 3: செப்டெம்பர் 29, 2025 நிலவரப்படி பங்களாதேஷ் மற்றும் நேபாளம் தேர்தல்களை எதிர்பார்த்து தங்கள் பாராளுமன்றங்களைக் கலைத்துள்ளன. கலைப்பதற்கு முன்னரான தரவு பங்களாதேஷ் (ஆகஸ்ட் 2024) மற்றும் நேபாளம் (செப்டெம்பர் 2025) ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சர்வதேச அங்கீகாரத்தை இழந்துள்ளதால் அது இந்த ஆய்விலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அட்டவணை 1: இலங்கை பாராளுமன்றங்களில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்
அட்டவணை 2: தெற்காசியப் பாராளுமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம் – கீழ் சபை மற்றும் ஒற்றைச் சபை
குறிப்புகள்:
*பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் பாராளுமன்றங்கள் முறையே ஆகஸ்ட் 2024 மற்றும் செப்டெம்பர் 2025 இல் கலைக்கப்பட்டன. இந்த ஆய்விற்காக கலைப்பதற்கு முன்னரான தரவுகள் பயன்படுத்தப்பட்டன.
அட்டவணை 3: தெற்காசியப் பாராளுமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம்: ஒன்றிணைந்த ஆசனங்கள் (கீழ் சபைகள் + மேல் சபைகள்) மற்றும் ஒற்றைச் சபை
குறிப்பு:
*பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் பாராளுமன்றங்கள் முறையே ஆகஸ்ட் 2024 மற்றும் செப்டெம்பர் 2025 இல் கலைக்கப்பட்டன. இந்த ஆய்விற்காக கலைப்பதற்கு முன்னரான தரவுகள் பயன்படுத்தப்பட்டன.
மூலம்
இலங்கைப் பாராளுமன்றம், பெண் உறுப்பினர்கள், பார்வையிட: https://www.parliament.lk/lady-members
பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், டேட்டா எக்ஸ்புளோரர், பார்வையிட: https://data.ipu.org/data-explorer/
ஐக்கிய நாடுகள் புள்ளிவிபரப் பிரிவு, தேசியப் பாராளுமன்றங்களில் பெண்கள் வகிக்கும் ஆசனங்களின் விகிதம், பார்வையிட: https://worldbank.github.io/sdg-metadata/metadata/en/5-5-1a/