ரோஹண பண்டார

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

"

(ஜனாதிபதிக்கு) கனவொன்று இருந்தால், அந்தக் கனவை நனவாக்குவதற்கு முறையான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவர் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அது பொய்யான அறிக்கையாக மாறியுள்ளதுடன் அந்த வரவு செலவுத் திட்டத்தின் 94% பூர்த்திசெய்யப்படவில்லை.

பாராளுமன்றம் | பிப்ரவரி 21, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதியின் எதிர்காலம் குறித்த கூற்றுக்கள் யதார்த்தமானவை அல்ல எனவும் நடைமுறை சாத்தியம் அற்றவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார பாராளுமன்றத்தில் விவாதித்திருந்தார். அவரது விவாதத்திற்கான உதாரணங்களில் ஒன்றாக ‘2023 ஆம் ஆண்டில்’ சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் 94 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை அவர் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக்கொள்கிறது.

இலங்கையில் வரவு செலவுத்திட்ட நடைமுறைப்படுத்தலை மதிப்பீடு செய்யும் ஒரே பொது மூலம் PublicFinance.lk தளத்திலுள்ள வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள் டாஷ்போர்டு (BPD) ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், 2023 வரவு செலவுத்திட்டத்தின் அரையாண்டு மதிப்பீட்டை மட்டுமே BPD வெளியிட்டிருந்தது.

அடுத்துவரும் நிதி/வரவு செலவுத்திட்ட ஆண்டிற்கான புதிய முன்மொழியப்பட்ட வருமானம், செலவினம், ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் என அனைத்தையும் வரவு செலவுத்திட்ட உரை கோடிட்டுக் காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் 29 மொத்த செலவின முன்மொழிவுகளில், அதிக பெறுமதியைக் கொண்ட 25 செலவின முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்து BPD மதிப்பிட்டிருந்தது. 25 செலவின முன்மொழிவுகளில் இரண்டு மட்டுமே எதிர்பார்த்தவாறு “முன்னேற்றம் அடைவதாக” வகைப்படுத்தப்பட்டிருந்தன. இது அரையாண்டு மதிப்பீட்டில் 23 அல்லது 92% முன்மொழிவுகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியுடன் ஓரளவு பொருந்துகிறது.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அவரது உதாரணத்தை முன்வைக்கும் விதம் இரண்டு விடயங்களில் தவறாக உள்ளது. முதலாவது, 25 அதிக பெறுமதியுடைய செலவின முன்மொழிவுகளுக்கு மட்டும் என்பதை விளக்குவதற்குத் தவறிவிட்டு, முழுமையான வரவு செலவுத்திட்டத்திற்கும் என்பது போன்று குறிப்பிடுகிறார். இரண்டாவதாக, அவர் முழு ஆண்டுக்கும் எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அது அரையாண்டு மதிப்பீட்டிலுள்ள பெறுமதி ஆகும். இறுதியாண்டு மதிப்பீடு முழுமையடைந்த பின்னர் 25 முன்மொழிவுகளில் 21 அல்லது 84% முன்மொழிவுகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டறியப்பட்டது.

மொத்தத்தில், நடைமுறை செயல்திட்டங்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக வரவு செலவுத்திட்டத்தின் மோசமான நடைமுறைப்படுத்தலை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது கிடைக்கும் தரவுகளால் ஆதரிக்கப்படுகிறது. எனினும் அவர் தரவைக் குறிப்பிடும் விதம் வரவு செலவுத்திட்ட நடைமுறைப்படுத்தலின் நோக்கத்தை மிகைப்படுத்துகிறது.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்

Budget Promises dashboard, PublicFinance.lk, https://dashboards.publicfinance.lk/budget-promises/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன