லக்ஷ்மன் கிரியெல்ல

பாராளுமன்ற உறுப்பினர் கிரியல்ல இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

கடன் மறுசீரமைப்புக்கு (இலங்கையை) போன்று உலகின் வேறு எந்த நாடும் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக்கொண்டதில்லை. ஒவ்வொரு நாடும் அந்தச் செயல்முறையை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் நிறைவுசெய்துள்ளன.

பாராளுமன்ற யூடியூப் சனல் | மே 22, 2024

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, (அ) கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்வதற்கு இலங்கையை (இரண்டரை ஆண்டுகள்) போன்று வேறு எந்த நாடும் நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டதில்லை (ஆ) ஒவ்வொரு நாடும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க கடன் மறுசீரமைப்பு அத்தியாயங்கள் தொடர்பான விரிவான தரவுத் தொகுப்பு (கிறிஸ்டோஃப் ட்ரெபெஸ்ச்சின் ஆய்வுடன் தொடர்புடையது) மற்றும் அதற்கான வெரிட்டே ரிசேர்ச்சின் புதுப்பிப்புகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

மறுசீரமைப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலமானது மீள்கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்ட திகதியிலிருந்து கடன் பரிமாற்றம் இறுதிசெய்யப்பட்ட திகதி வரையான காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த அறிக்கை வெளியான நேரத்தில், இலங்கை கடன் மீள்கொடுப்பனவுகளை இடைநிறுத்தி 2.1 ஆண்டுகள் ஆகியிருந்தன. கடன் மறுசீரமைப்பை இலங்கை எப்போது நிறைவுசெய்யும் என்பதைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் இரண்டரை ஆண்டுகள் என்பது நியாயமானது என FactCheck.lk மதிப்பிட்டது.

கடந்த காலங்களில் கடன் மறுசீரமைப்பு என்பது மெதுவான செயல்முறை ஆகும். அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தச் செயல்முறை வேகமடைந்துள்ளது. தரவுத்தொகுப்பு பின்வருபவற்றைக் காட்டுகிறது:

  • 1975 – 1995 காலப்பகுதியில், 156 கடன் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிறைவடைவதற்கு சராசரியாக 3.7 ஆண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • 1995 – 2015 காலப்பகுதியில், 28 கடன் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சராசரியாக 1.4 ஆண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • 2015 – 2020 காலப்பகுதியில், 9 கடன் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சராசரியாக 1.1 ஆண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு முதல் 15 கடன் மறுசீரமைப்புகளில் (இலங்கை தவிர்ந்த) 3 இரண்டரை ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை எடுத்துள்ளன. 10 மட்டுமே ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பதை அட்டவணை 1 காட்டுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் அண்மைக் காலங்களைக் குறிப்பிடுவதாக இருந்தாலும், அவருடைய கூற்று இரண்டு வகையிலும் தவறாக உள்ளது: 66% கடன் மறுசீரமைப்புகள் மட்டுமே ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவடைந்துள்ளன, 20% இரண்டரை ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை எடுத்துள்ளன.

எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு 1: ஜுன் 26, 2024 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் பாராளுமன்ற உறுப்பினர் கிரியல்லவின் உரைக்கு எதிரான கூற்றை முன்வைத்தார். இந்தக் காலக்கெடுவிற்குள் அண்மைக் காலங்களில் எந்தவொரு நாடும் “விதிவிலக்கான வெற்றியை” பெறவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றும் தவறானது எனக் காட்டுவதற்கு அதே தரவு பயன்படுத்தப்பட்டது. இலங்கை மெதுவானதும் அல்ல, வேகமானதும் அல்ல. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மறுசீரமைப்பின் வேகத்தில் கீழுள்ள 25 சதவீதத்தில் இலங்கை உள்ளது.

மேலதிகக் குறிப்பு 2: சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர் மட்ட ஒப்பந்தத் திகதியிலிருந்து கணக்கிடப்படும் மறுசீரமைப்பிற்கான காலப்பகுதி தொடர்பான தரவை சர்வதேச நாணய நிதியம் வெளியிடுகிறது. அந்தத் தரவும் கூட இலங்கையால் எடுக்கப்பட்ட காலம் மெதுவானதும் அல்ல, வேகமானதும் அல்ல என்ற அதே மதிப்பீட்டையே வழங்குகின்றது. ஆனால் இது நிலையான அளவீடு அல்ல. நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இல்லாமல் கூட கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கலாம். அத்துடன் கடன் மீள்கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு முன்னதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இணையலாம்.

அட்டவணை 1: கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட காலம்



மூலம்

அசோனுமா, டாமொன் மற்றும் கிறிஸ்டோஃப் ட்ரெபெஸ்ச் (2016): “இறையாண்மை கடன் மறுசீரமைப்புகள்: கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவதற்கு முன்பு அல்லது பின்பு”, ஐரோப்பிய பொருளாதாரச் சங்கத்தின் ஜர்னல், தொகுதி 15(1), பக்கங்கள் 175-214

க்ருசஸ், ஜுவான் மற்றும் கிறிஸ்டோஃப் ட்ரெபெஸ்ச் (2013): “அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுதல்: கடனின் மதிப்பைக் குறைப்பதற்குச் செலுத்த வேண்டிய விலை”, அமெரிக்கன் பொருளாதார ஜர்னல், பேரண்டப் பொருளாதாரம், மேலதிக மறுசீரமைப்பு பண்புகளை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் (கடனின் மதிப்பு குறைக்கப்பட்ட அளவு (Haircut size), மறுசீரமைக்கப்பட்ட பெறுமதி போன்றவை) மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவுத்தொகுப்புகள், பார்வையிட: https://sites.google.com/site/christophtrebesch/data

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன