உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கல்வித் தேவைகள் கிடைப்பது குறைவாக உள்ளதாகவும், 34% சிறுவர்கள் (விசேட தேவையுடையவர்கள்) முறையான கல்வியைப் பெறவில்லை எனவும் கிடைக்கும் சமீபத்திய தரவைச் சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க 2012 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டுவசதிகள் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.
2012 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 5-19க்கு இடைப்பட்ட வயதில் உடல் மற்றும் மனநலக் குறைபாட்டுடன் 88,740 சிறுவர்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகையில் 30,308 சிறுவர்கள் (இது 34.1%) எந்தவிதமான கல்விச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆகவே அவர் குறிப்பிடும் புள்ளிவிபரம் கண்கெடுப்பில் அறிக்கையிடப்பட்டுள்ள பெறுமதியுடன் பொருந்துகிறது.
இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி தொடர்பான புள்ளிவிபரங்கள் தொடர்பான 2012 கணக்கெடுப்பு வெளியீட்டைத் தவிர சமீபத்திய வேறு எந்தத் தரவையும் FactCheck.lk இனால் கண்டறிய முடியவில்லை. எனவே இதுவே கிடைக்கும் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது சரியானது போல் தெரிகின்றது.
விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி தொடர்பில் கிடைக்கும் சமீபத்திய உத்தியோகபூர்வ அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெருமவின் கூற்றுக்களை ஆதரிக்கின்றது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.
மேலதிகக் குறிப்பு 1: உடல் மற்றும் மன நலக் குறைபாடுகளைக் கொண்ட தனிநபர்களை அடையாளம் காண்பதற்கு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை ஆறு கேள்விகளைப் பயன்படுத்துகிறது. பின்வரும் செயல்களில் ஈடுபடும்போது பதிலளிப்பவர் எதிர்கொள்ளும் சிரமத்தின் அளவு தொடர்பில் கேள்விகள் கேட்கப்படுகின்றன: (1) பார்த்தல் (2) கேட்டல் (3) நடத்தல் அல்லது படிகளில் ஏறுதல் (4) எதையாவது நினைவில் வைத்திருத்தல் அல்லது கவனம் செலுத்துதல் (5) குளித்தல் மற்றும் ஆடை உடுத்துதல் போன்ற நாளாந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் (6) ஏனையவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறுதல். உலக சுகாதார நிறுவனத்தினால் இயலாமையை மதிப்பிடுவதற்காக வழங்கப்பட்ட கையேடு மற்றும் இயலாமை புள்ளிவிபரங்களுக்கான வாஷிங்டன் குழுவினால் உருவாக்கப்பட்ட செயல்பாட்டுக் கேள்விகள் பற்றிய குறுகிய தொகுப்பு ஆகியவற்றுடன் இந்த கணக்கெடுப்பு முறை ஒத்துப்போகின்றது.
மூலம்
குடிசன மற்றும் வீட்டுவசதிகள் கணக்கெடுப்பு இறுதி அறிக்கை 2012