உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மூன்று விடயங்களைக் குறிப்பிடுகின்றார். (1) தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 வீதம் (2) நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது (3) 2015 – 2019 ஆட்சியில் இருந்த அரசாங்கம் உள்ளூராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றின் உண்மைத்தன்மையை இலங்கை பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகளைப் பயன்படுத்தி FactCheck ஆராய்ந்தது.
அட்டவணை 1 இல் காட்டப்படுவது போன்று, முதலாவது கூற்றில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாக உள்ளார் – தற்போதுள்ள பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 13 பேர் (அல்லது 5.8%) பெண்கள்1. மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றும் சரியானது ஆகும் – 1989 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் சராசரியாக 5.3 வீதமாக காணப்படுகின்றது. இந்த சதவீதமானது உலகளாவிய விதிமுறைகளுடன் ஒப்பிடும் போதும் குறைவாக உள்ளது – 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் 193 நாடுகளில் 183 ஆவது நாடாக பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் மற்றும் ஐ.நா பெண்கள் இலங்கையை நிரல்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தெரிவான பெண்களின் எண்ணிக்கை 1.9 சதவீதமாகும். 2017 ஆம் ஆண்டில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களிலும் முன்னெடுக்கப்பட்டது. இது பாராளுமன்ற உறுப்பினரின் மூன்றாவது கூற்றும் சரியானது என்பதை உறுதிப்படுத்துகின்றது
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கள் ‘சரியானவை’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
கவனத்தில் கொள்ளவும்: ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையில் பலவீனங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பெண்களின் உண்மையான சதவீதத்தினை தேர்தல் ஆணைக்குழு வெளியிடவில்லை. நியமிக்கப்பட்டவர்களில் குறைந்தது 15 வீதமானவர்கள் பெண்கள் என Verité Research மதிப்பிட்டது. ஆனால் 22.1 சதவீதமான பெண்கள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் முறைசாரா தகவல் தொடர்புகள் தெரிவிக்கின்றன.
மேலதிக குறிப்புக்கள்: ‘தற்போது பாராளுமன்றத்துக்கு அதாவது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பெண்களில் 12 பேர் மாத்திரமே கடமையாற்றுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமைக்காக 2017 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் எவரும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. அரசியலமைப்பின் (திருத்தப்பட்டது) பிரிவு 91(1) (d)(xiii) பார்க்கவும்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் (1989 முதல் இன்று வரை)
மூலம்
- இலங்கை பாராளுமன்றம், பெண் உறுப்பினர்கள், பார்வையிட: https://www.parliament.lk/lady-members
- இலங்கை தேர்தல் ஆணைக்குழு, அரசியலில் பெண்கள், பார்வையிட: https://elections.gov.lk/web/en/all-inclusive-election/women-in-elections/
- இலங்கை தேர்தல் ஆணைக்குழு, உள்ளூராட்சி தேர்தல்கள் (திருத்தப்பட்டது) சட்டம் 2017, பார்வையிட: https://elections.gov.lk/web/wp-content/uploads/publication/acts/16-2017_T.pdf
- பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், அரசியலில் பெண்கள்: 2019, பார்வையிட: https://www.ipu.org/resources/publications/infographics/2019-03/women-in-politics-2019
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (15 மே 2015 வரை திருத்தப்பட்டது), பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution.pdf
- Verité Research, உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு: வாக்குறுதியை முடிவுகள் தோல்வியடையச் செய்யும், பார்வையிட: https://www.veriteresearch.org/2018/02/09/womens-quota-in-local-authority-elections-outcomes-will-fail-the-promise/