உண்மைச் சரிபார்ப்புகளும்
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்த பின்வரும் கூற்றுக்களை, திவயின பத்திரிகை 2019 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.
1. புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 400,000.
2. 75 வீதமான பயணிகள் பேருந்து போக்குவரத்து தனியார் துறையினாலும், மீதம் 25 வீதம் இலங்கை போக்குவரத்துச் சபை(SLTB) பேருந்துக்களினாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தக் கூற்றுக்களை சரிபார்ப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான திறன் அறிக்கையும் (TCAPR), போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள புள்ளிவிபரங்களும் (MTCA) பயன்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் போக்குவரத்து பொதுவாக நாளாந்தம் அல்லது வருடாந்தம் பதிவு செய்யப்படுகின்றது. முதலாவது கூற்றைப் பொறுத்தவரை, கடந்த பல வருடங்களாக ரயில் போக்குவரத்தை வருடாந்தம் சுமார் 100,000 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர் (TCAPR). எனவே, அமைச்சர் நாளாந்த எண்ணிக்கையையே குறிப்பிடுகின்றார் எனக் கருதலாம். 2018 ஆம் ஆண்டில் புகையிரதத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 137.51 மில்லியன் ஆகும் (TCAPR). எனவே 2018 ஆம் ஆண்டில் நாளாந்தம் புகையிரத சேவையை பயன்படுத்தியவர்களின் சராசரி 376,740. மற்றொரு மூலத்தில் நாளாந்தம் 367,000 பயணிகள் பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது (MTCA). அமைச்சர் இதனை மட்டம் தட்டி “சுமார் 400,000” என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரை, 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சராசரியாக 23.03 வீதமான பயணிகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளையும், 76.97 வீதமானவர்கள் தனியார் பேருந்துக்களையும் பயன்படுத்தியுள்ளதை அட்டவணை 1 (MTCA) காட்டுகின்றது. அமைச்சர் இதனை மட்டம் தட்டி 25 சதவீதம் மற்றும் 75 சதவீதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றுக்களை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: பயணிகள் பேருந்து போக்குவரத்து 2016 -2018 (மில்லியன் பயணிகள் கிலோமீற்றர்)
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
பயன்படுத்தப்பட்ட அளவீடுகள் தொடர்பில் மேலதிக விளக்கம்
ஒரு பயணிகள் கிலோமீட்டர் என்பது ஒரு பயணி ஒரு கிலோமீட்டருக்கு மேல் பயணிப்பதைக் குறிக்கும் அளவீட்டு அலகு ஆகும். மொத்த பயணிகள் போக்குவரத்தை அளவிடுவதற்கு பயணிகளின் எண்ணிக்கையை அளவீடாக பயன்படுத்தினால், பயணி குறுகிய தூரமா அல்லது நீண்ட தூரம் பயணிக்கின்றாரா என்பதை வித்தியாசப்படுத்த முடியாது. மேலும், பயணத் தூரத்தை அளவீடாகக் கொண்டால் எத்தனை பயணிகள் பயணித்துள்ளார்கள் என்பதை அளவிட முடியாது. ஆனால் பயணிகள் கிலோமீற்றர் என்னும் அளவீடானது இந்த இரண்டு விடயங்களையும் கருத்தில் கொள்கின்றது. எனவே மொத்த பயணிகள் போக்குவரத்தை அளவிடுவதற்கு இது பொருத்தமான அளவீடாக காணப்படுகின்றது.
மூலம்
- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலங்கை புகையிரத சேவைகள், ‘செயல்பாடு’ பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=24&Itemid=144&lang=en#operational [last accessed: 06 August 2019]
- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, திறன் அறிக்கை (2018), பக்கம் 54, பார்வையிட: https://www.parliament.lk/uploads/documents/paperspresented/performance-report-ministry-of-transport-civil-aviation-2018.pdf [last accessed: 06 August 2019]
- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, ‘தனியார் பேருந்து செயல்பாடு (மாகாணங்களுக்கு உள்ளே மற்றும் இடையே’ பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=27&Itemid=147&lang=en#private-bus-operational-data-inter-intra-provincial [last accessed: 06 August 2019]
- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலங்கை போக்குவரத்துச் சபை, ‘அடிப்படைத் தகவல்கள்’ பார்வையிட: http://www.transport.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=25&Itemid=145&lang=en#basic-information [last accessed: 06 August 2019]