உண்மைச் சரிபார்ப்புகளும்
“… எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால் குறைந்துள்ளது.”
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர (1) முன்னாள் ஜனாதிபதி எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகளை நான்கு மடங்கு அதிகரித்தார் (2) எரிவாயு பாவனை 40 சதவீதத்தால் குறைந்ததன் காரணமாகவே அவரது ஆட்சிக்காலத்தில் எரிவாயுக்கான வரிசைகள் குறைந்தன எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாதாந்த பணவீக்க வெளியீடுகளில் இருந்து பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயுவின் மாதாந்த சில்லறை விலைகள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் திரவ பெற்றோலிய எரிவாயுவிற்கான இறக்குமதித் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.
கூற்று 1: ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜுலை 2022 இல் பதவியேற்பதற்கு முன்னரும் பின்னரும் விலைகளின் போக்கை FactCheck.lk ஆராய்ந்தது. ஒக்டோபர் 2021 முதல் விலைகள் ஆராயப்பட்டன. இது பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தியதுடன் இறுதியில் இலங்கை ஏப்ரல் 2022 இல் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறும் நிலைக்கு இட்டுச் சென்றது.
ஒக்டோபர் 2021 முதல் ஜுலை 2022 இடையே பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்தன. ஜுலை 2022 இல் இது உச்சத்தைத் தொட்டது. இந்தக் காலப்பகுதியில் டீசலின் விலை அதிகளவாக நான்கு மடங்கால் அதிகரித்தது. பெற்றோலின் விலை 2.9 மடங்காலும், எரிவாயுவின் விலை 2.5 மடங்காலும் அதிகரித்தன. இதனுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்தது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இந்த நிகழ்வுகள் விக்கிரமசிங்க ஜுலை 20, 2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நிகழ்ந்தன.
மேலும், விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கவில்லை. அத்துடன் ஓரளவு குறைந்தன (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஆகவே விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு விக்கிரமசிங்கவைக் காரணம் காட்டுவது தரவுகளால் ஆதரிக்கப்படவில்லை.
கூற்று 2 – திரவ பெற்றோலிய எரிவாயுவின் (LPG) பாவனையை மதிப்பிடுவதற்கு அதன் இறக்குமதித் தரவை FactCheck.lk ஆராய்ந்தது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் LPG இறக்குமதிகள் 36.6 சதவீதத்தால் குறைந்துள்ளதை தரவு காட்டுகின்றது. இது ஜயவீர குறிப்பிடும் 40% வீழ்ச்சியுடன் ஓரளவு பொருந்துகின்றது. LPG இறக்குமதிகளில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி மற்றும் வரிசைகளில் காத்திருப்பது முடிவுக்கு வந்தது என்பன எரிவாயுவை வாங்குவதற்கான கேள்வி குறைந்ததைக் காட்டுகின்றது. 2023 ஆம் ஆண்டிலும் LPG இறக்குமதிகள் 2019 ஆம் ஆண்டின் நெருக்கடிக்கு முன்னரான நிலையை விட 17% குறைவாகவே உள்ளது. எனவே எரிவாயு பாவனை குறைந்துள்ளது என்ற கூற்று தரவுகளால் ஆதரிக்கப்படுகின்றது. எரிவாயுவை வாங்குவதற்கான திறன் குறைந்துள்ளது காரணமாக வரிசையில் நிற்பது முடிவுக்கு வந்தது என்ற மறைமுகமான கூற்றை மதிப்பிட இந்த உண்மைச் சரிபார்ப்பு முயற்சிக்கவில்லை.
மொத்தத்தில், பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனை விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவி மீது காரணம் காட்ட முடியாது. எனினும் எரிவாயு பாவனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கூற்று இறக்குமதி தரவினால் ஆதரிக்கப்படுகின்றது.
ஆகவே ஜயவீரவின் கூற்றை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: மாதாந்த சராசரி திறந்த சந்தை சில்லறை விலைகள்
மூலம்
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், தொடர்புடைய மாதங்கள்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, வர்த்தகப் புள்ளிவிபரங்கள். https://stat.edb.gov.lk/index.php