உண்மைச் சரிபார்ப்புகளும்
தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்கள் அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாதிடுகின்றார். இந்த விவாதத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு, உலகளவிலுள்ள எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ”மென்பொருள் பொறியியலாளர்களின்” எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, ஈவான்ஸ் டேட்டா காப்பரேசன் (EDC), SLASSCOM மற்றும் PWC இலங்கையால் அறிக்கையிடப்பட்ட இலங்கை IT – BPM துறை: 2019/20 தொழில்நிலை அறிக்கை, உலக வங்கி சனத்தொகை தரவு மற்றும் உலக வங்கியின் டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் போக்குகள் அறிக்கை 2023 உட்பட பல்வேறு மூலங்களை FactCheck.lk ஆராய்ந்தது.
ஜனாதிபதி குறிப்பிடும் கூற்று இரண்டு காரணங்களால் பிரச்சினைக்குரியது.
முதலாவது, ஜனாதிபதி குறிப்பிடும் எண்ணிக்கைகள் சரியாக இருந்தால் அவரது ஒட்டுமொத்த வாதத்திற்கு ஆதரவளிக்காது.
ஜனாதிபதி குறிப்பிடும் எண்ணிக்கைகளின் பிரகாரம், ஒவ்வொரு 10,000 பேருக்கும் இலங்கை 39 மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்குகின்றது. அதேவேளை உலகளவில் ஒவ்வொரு 10,000 பேருக்கும் 32 பொறியியலாளர்கள் மட்டுமே உருவாக்கப்படுகின்றார்கள். உலக சராசரியை விட இலங்கையில் மென்பொருள் பொறியியலாளர்களின் விகிதம் அதிகமாக உள்ளது என்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது ஜனாதிபதி குறிப்பிடுவதற்கு முரணானது.
இரண்டாவது, ஜனாதிபதியின் ”மென்பொருள் பொறியியலாளர்கள்” என்ற வார்த்தையின் பயன்பாடு தெளிவற்றது.
இலங்கைக்கு அவர் 85,000 எனக் குறிப்பிடுகின்றார். இது இலங்கையின் ஒட்டுமொத்த ”தகவல் தொழில்நுட்ப (IT) தொழிற்படைக்கும்” SLASSCOM (சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால் 88,051) அறிக்கையிட்டுள்ள எண்ணிக்கையாகும். உலகளாவிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவர் 26 மில்லியனைக் குறிப்பிடுகின்றார். இது ”டெவலப்பர்களுக்கு” மட்டுமான EDC குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையாகும். எனினும் “மென்பொருள் பொறியியலாளர்கள்” என்ற பதம் ”டெவலப்பர்களை” குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இது ”IT தொழிற்படையை” குறிப்பிடப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் “டெவலப்பர்கள்” என்பது “IT தொழிற்படையின்” ஒரு அங்கமாகும். இந்தத் துறையில் மேலும் பல பிரிவுகள் உள்ளன. எனவே ஜனாதிபதி குறிப்பிடும் இரண்டு எண்ணிக்கைகளும் ஒன்றுக்கொன்று ஒப்பிடக் கூடியவை அல்ல.
எனினும், ஜனாதிபதி ஒட்டுமொத்த IT தொழிற்படையைக் குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொண்டால், சரியான உலகளாவிய எண்ணிக்கை (2022 ஆம் ஆண்டில்) உலக வங்கியின் பிரகாரம் 68 மில்லியனாக இருக்கும். 10,000 பேருக்கு IT தொழிற்படையின் 40 என்னும் இலங்கையின் விகிதம் உலக சராசரியான 85 ஐ விட மிகக் குறைவாகும்.
ஒருவேளை, ஜனாதிபதி ”டெவலப்பர்களை” குறிப்பிடுவதாக நாம் புரிந்துகொண்டால், இலங்கைக்கான சரியான எண்ணிக்கை SLASSSCOM பிரகாரம் 34,340 ஆகும். 10,000 பேருக்கு 16 டெவலப்பர்கள்/ மென்பொருள் பொறியிலாளர்கள் என்ற இலங்கையின் விகிதம் உலக சராசரியான 10,000 பேருக்கு 32 டெவலப்பர்கள் என்பதை விட மிகக் குறைவாகும்.
ஜனாதிபதி பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் பெறுமதிகள் தவறாகவும், அங்கங்கே வேறுபட்டு இருந்தாலும் கூட அவர் தெரிவிக்க விரும்பும் கருத்து சரியாக உள்ளது. இலங்கையில் டெவலப்பர்கள் மற்றும் மொத்த ITதொழிற்படையின் விகிதம் உலக சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது.
எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: சனத்தொகை மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் விகிதாச்சாரம்