Harsha de Silva

செலவினம் தொடர்பில் ஹர்ஷ த சில்வா கருத்து தெரிவித்துள்ளார்

"

எங்கள் முதன்மை செலவினங்களை [..] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டும் என அது (நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு) கோருகின்றது. அது (வருமானம்) அதிகரித்தாலும் அந்த வருமானத்தை நாங்கள் செலவினத்திற்குப் பயன்படுத்த முடியாது. இது ஏனென்றால் நிதி அமைச்சின் பதில் அமைச்சராக கௌரவ. அனில் ஜய

பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஜூன் 30, 2025

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா பாராளுமன்றத்தில் இரண்டு முக்கிய கூற்றுக்களை முன்வைத்துள்ளார்: (1) முதன்மை செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வருமானம் அதிகரித்தாலும் செலவினத்தை இது மட்டுப்படுத்துகின்றது (2) தற்போதைய இந்த வரம்புக்கு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அவர் காரணமாகக் குறிப்பிடுவதுடன் அது நிதி அமைச்சின் பதில் அமைச்சரால் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இறை உபாய அறிக்கையில் வெளியிடப்பட்ட நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு (MTFF), இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட செயல்நோக்கக் கடிதங்கள் (LOI), 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. செயல்நோக்கக் கடிதத்தில் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அனைத்து உத்தியோகபூர்வ கடமைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூற்று 1: முதன்மைச் செலவினம் மொ.உ.உற்பத்தியின் 13 சதவீதமாக இருக்க வேண்டும் என நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு குறிப்பிடுகின்றது. குறிப்பாக, 13% என்னும் வரம்பு, 2024 ஜுனில் நிறைவேற்றப்பட்ட பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவு 15(1) இல் சட்டரீதியாகக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான ஒரு வரம்பு நிலவுகின்றது என்பதையும் வருமானங்கள் அதிகரித்தாலும் அரசாங்கத்தின் செலவினங்களை அது தற்போது மட்டுப்படுத்துகின்றது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகின்றார்.

கூற்று 2: இந்த 13% என்னும் வரம்புக்கான தேவையைக் கண்டுபிடிப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்ட திகதி வரை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மார்ச் 2023, டிசம்பர் 2023, ஜுன் 2024 மற்றும் மார்ச் 2025 திகதியிடப்பட்ட நான்கு செயல்நோக்குக் கடிதங்களை FactCheck.lk ஆராய்ந்தது. இந்த ஆவணங்கள் எதுவுமே முதன்மைச் செலவினம் 13 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடவில்லை. எனவே 13% வரம்பு என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ தேவைப்பாடு என்பதற்கான எந்த ஆதாரமும் (மேலதிகக் குறிப்பு 1க்கு உட்பட்டது) இல்லை.

 

செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உள்ளது என்றாலும், அது தற்போதைய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு நடந்திருக்கும். 13% வரம்பு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் 2024 ஜுனில் சட்டத்தில் உள்வாங்கப்பட்டது. இந்த சட்ட விதி தற்போதுள்ள அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துவதுடன் ஏற்கனவேயுள்ள சட்டத்தைத் தாண்டி எந்தவித புதிய அல்லது வெளிப்புறத்தால் விதிக்கப்பட்ட கடமைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை.

எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு 1: சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மார்ச் 2023 செயல்நோக்கக் கடிதத்தில், 2023 டிசம்பரில் 13% வரம்பை சட்டபூர்வமாகக் கட்டாயப்படுத்தும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கான திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத் திட்டம் மீதான முந்தைய நடவடிக்கையின் ஒரு பகுதியான இந்தச் சட்டமூலம் 2024 ஜுனில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

மேலதிகக் குறிப்பு 2: செலவினம் மீதான 13% என்னும் வரம்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் சுயாதீன ஆய்வாளர்களால் விமர்ச்சிக்கப்பட்டது (மேலதிகத் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்). எனினும் வாக்கெடுப்பு எதுவும் இன்றி பாராளுமன்றம் சட்டமூலத்தை நிறைவேற்றியது.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

நடுத்தரக் கால இறை உபாயம், நிதி அமைச்சு. https://www.treasury.gov.lk/web/fiscal-strategy/section/fiscal%20strategy%20in%20the%20medium%20term

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம், பாராளுமன்றம். https://www.parliament.lk/uploads/acts/gbills/english/6352.pdf

செயல்நோக்கக் கடிதம், சர்வதேச நாணய நிதியம். மார்ச் 2025: https://www.imf.org/en/Publications/CR/Issues/2025/03/03/Sri-Lanka-Third-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-562827

செயல்நோக்கக் கடிதம், சர்வதேச நாணய நிதியம். ஜுன் 2024: https://www.imf.org/en/Publications/CR/Issues/2024/06/13/Sri-Lanka-2024-Article-IV-Consultation-and-Second-Review-Under-the-Extended-Fund-Facility-550261

செயல்நோக்கக் கடிதம், சர்வதேச நாணய நிதியம். டிசம்பர் 2023: https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/12/12/Sri-Lanka-First-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-542441

செயல்நோக்கக் கடிதம், சர்வதேச நாணய நிதியம். மார்ச் 2023: https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/03/20/Sri-Lanka-Request-for-an-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-Press-531191

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன