சிசிர ஜயக்கொடி

சிசிர ஜயக்கொடி: பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜாவுரிமை குறித்த செய்தித் தயாரிப்பு

"

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளார்கள் என எங்களுக்குத் தெரியும்.

திவயின | ஜனவரி 2, 2019

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றை FactCheck மூன்று வழிகளில் சரிபார்த்தது: (1) பொதுத்தளங்களில் உள்ள தகவல்கள் (2) நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியிடம் அவரது கூற்றுக்கான ஆதாரங்களைக் கோருதல் (3) எமது FactCheck தளங்களில் ஆதாரங்களை வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்தல்.

இலங்கை அரசியலமைப்பின் சரத்து 91(1)(d)(xiii) இன் பிரகாரம், ‘இலங்கை குடிமகன் ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கோ அல்லது பாராளுமன்றத்தில் வாக்கினை அளிப்பதற்கோ தகுதியற்றவர்’. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்படுகின்றனர் என்பதே பாராளுமன்ற உறுப்பினரது கூற்றின் சாராம்சம் ஆகும்.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை வைத்திருப்பதாக எழுந்த இதேபோன்றதொரு குற்றச்சாட்டில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி பெவ்ரல் அமைப்பு ஊடக அறிக்கையாக வெளியிட்டிருந்தது. இந்த தகவல்களில் கீதா குமாரசிங்க மாத்திரமே இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பெவ்ரல் வெளியிட்ட தகவல்களைத் தவிர்த்து (1) பொதுவெளியிலோ (2) பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியிடம் இருந்தோ அல்லது (3) எமது தளங்களில் தகவல்களை வழங்கலாம் என்ற பகிரங்க அழைப்பின் மூலமோ எங்களுக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘முற்றிலும் தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

இந்தக் கூற்றானது ‘ஆராயப்பட வேண்டும்’ என முடிவு வழங்கப்பட்டு 2019 பெப்ரவரி 08 ஆம் திகதி FactCheck பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட பின்னர், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியிடம் நாங்கள் தபால் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் அறிவித்தோம்.

அவரது கூற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை வழங்குவதற்கு பா.உ ஜயக்கொடிக்கு 2019 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர், எங்கள் இறுதி முடிவை மீளாய்வு செய்வோம் என நாங்கள் எங்கள் வாசகர்களுக்கு உறுதி அளித்திருந்தோம்.

நாங்கள் இது தொடர்பில் அறிவித்தது முதல் பா.உ ஜயக்கொடி எங்களுடன் தொடர்பில் இருந்தார். எனினும், பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்தோ அல்லது வேறு வகையிலோ அவரது கூற்றை உறுதிப்படுத்துவதற்கான எந்த தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை

அதற்கமைய இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க என கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘முற்றிலும் தவறானது’ என அறிவிக்கின்றோம்.



மூலம்

  • நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், ஊடக அறிக்கை, ‘இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிங்க – குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்”: 24 ஓகஸ்ட் 2017, பார்வையிட: http://www.paffrel.com/posters/170824120842Binder1.pdf
  • இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு  (திருத்தப்பட்டது),  பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution.pdf