முஜிபுர் ரஹுமான்

கோவிட் -19 வெளிநாட்டு நிதியுதவி தொடர்பில் முஜிபுர் ரஹுமான்: தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்

"

(கோவிட் – 19 தொற்றினைக்) கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவிலான நிதி எமது நாட்டுக்கு கிடைத்துள்ளதை நாம் அறிவோம்… இவை அனைத்தையும் ஒன்றுசேர்க்கும் போது (இலங்கை)

லங்காதீப | ஏப்ரல் 28, 2020

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 ஏப்ரல் 28 ஆம் திகதி லங்காதீபவில் அவர் தெரிவித்த அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு அமைப்புக்களிடம் இருந்து “சுமார் 200 பில்லியன் ரூபாவை” அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மானியங்கள் தொடர்பாக அவர் குறிப்பிடுவதாக ரஹ்மானின் அறிக்கையை பத்திரிகை செய்தி குறிப்பிட்டாலும், FactCheck அவர் மேற்கோள் காட்டிய கூற்றினை மாத்திரம் அடிப்படையாகக் கொள்கின்றது. அதாவது மானியங்களை மாத்திரமன்றி அனைத்து செலவுசெய்யக்கூடிய நிதிகளையும் ரஹ்மான் குறிப்பிடுவதாக FactCheck விளங்கிக்கொள்கின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்தத் தொகையை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, வெளிநாட்டு அமைப்புக்களுடன் இலங்கை எவ்வாறான நிதி உடன்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றது என்பதை ஊடக அறிக்கைகள் மூலமாக FactCheck ஆராய்ந்தது. 2020 ஏப்ரல் 28 ஆம் திகதி வரையான அவ்வாறான உடன்பாடுகளின் மூலம் 203.4 பில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளதை அட்டவணை 1 காட்டுகின்றது. (குறிப்பு: இந்த தொகையானது வழங்குவதாக இணங்கப்பட்ட தொகையின் அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகின்றது. இது எழுதப்படும் வரையில் வழங்கப்பட்ட தொகை குறித்த தகவல்கள் பொதுவெளியில் கிடைக்கவில்லை. இந்த தொகையில் மருத்துவ உபகரணங்களுக்கான நன்கொடைகள் அல்லது வேறு வகையான நிவாரணங்கள் உள்ளடக்கப்படவில்லை).

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று இந்த அனைத்து நிதி ஏற்பாடுகளும் செலவு செய்யக்கூடிய நிதியின் கீழ் வகைப்படுத்த முடியாது. கோவிட் – 19 தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உதவிகள் மூன்று வகையான நிதி ஏற்பாடுகளின் கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

1.         மானியங்கள்:

இந்த வகையான நிதியானது கோவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்படக்கூடியது. அத்துடன் இவை திருப்பிச் செலுத்தப்படத் தேவையில்லை. கிடைக்கப்பெற்ற மானியங்களின் தொகை 5.4 பில்லியன் ரூபா ஆகும்.

2.         கடன்:

இவை செலவு செய்யக்கூடிய நிதி என்ற போதும், எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை. கடனாகக் கிடைத்த தொகை (உலக வங்கியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற (லைன் ஒஃவ் கிரடிட்) கடன் உட்பட) 121.0 பில்லியன் ரூபா ஆகும்.

3.         செலாவணி பரிமாற்ற முறை (கரன்சி ஸ்வாப்):

இது செலவு செய்யக்கூடிய நிதியைக் கொண்டிருக்கவில்லை, அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் நிதி நிலையில் இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கோவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்த முடியாது. இது வெறுமனே டொலருக்கான ரூபாயின் நாணய மாற்றுக்கு சமமானது.

கோவிட் – 19 பெருந்தொற்றை அடுத்து கையிருப்புக்களை அதிகரிக்கவும், குறுகிய கால சர்வதேச பணப்புழக்க தேவைகளைச் சந்திக்கவும் இந்திய ரிசர்வ் வங்கியுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (77 பில்லியன் ரூபாவிற்கு சமமானது) பெறுமதியான செலாவணி பரிமாற்ற (கரன்சி ஸ்வாப்) உடன்படிக்கையை இலங்கை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் டொலர்களை உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்த முடியும் என்ற வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது தவறான புரிந்துணர்வாகும். இவ்வாறான செலாவணி (கரன்சி ஸ்வாப்) பரிமாற்றத்தின் மூலம் பெறப்படும் நிதி மத்திய வங்கியின் கையிருப்புக்குச் செல்கின்றது, அத்துடன் இதனை அரசாங்கம் செலவு செய்ய முடியாது. செலாவணி (கரன்சி ஸ்வாப்) பரிமாற்றமானது ஒப்புக்கொள்ளப்பட்ட காலப்பகுதியின் இறுதியில் மீண்டும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

எனவே, வெளிநாட்டு அமைப்புக்களினால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிதி உடன்பாடுகளில் 126.4 பில்லியன் ரூபா (அல்லது 62.1%) மாத்திரமே கோவிட் – 19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்பட முடியும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை சரியாகத் தெரிவித்துள்ள போதும், செலாவணி பரிமாற்ற முறையில் (கரன்சி ஸ்வாப்) இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தொகையை செலவு செய்யக்கூடிய நிதியென தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

எனவே, அவரது அறிக்கையினை “பகுதியளவில் உண்மையானது” என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.