உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக குறிப்பிடும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதற்கான மூன்று காரணங்களையும் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.
- பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் மாத்திரமே வெளியிடப்படுகின்றன, நோய்த்தொற்றுக்குள்ளான ஆனால் பரிசோதிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை.
- பாதிக்கப்பட்டவர்களில் 15 வீதமானவர்கள் மாத்திரமே கோவிட் – 19 அறிகுறிகளைக் கொண்டுள்ளனர், மற்றையவர்கள் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமல் காவிகளாக இருக்கின்றனர்.
- இலங்கையில் மிகக்குறைந்தளவானவர்கள் அதாவது ஒரு மில்லியன் மக்களில் 100 பேர் மாத்திரமே பரிசோதிக்கப்படுகின்றனர். ஆனால் தென்கொரியாவில் ஒரு மில்லியன் மக்களில் 8,000 பேர் பரிசோதிக்கப்படுகின்றனர்,
முன்னாள் அமைச்சரின் முழுமையான அறிக்கையினை, அதற்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ள காரணங்கள் மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உண்மைச் சரிபார்ப்பு மதிப்பிடுகின்றது.
முன்னாள் அமைச்சர் தனது முதலாவது கூற்றில் சரியாக இருக்கின்றார். அமைச்சரின் கூற்றைப் போன்றே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொற்றுக்குள்ளானவர்களின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். (மேலதிக தகவல்களுக்கு https://ourworldindata.org/coronavirus-testing பார்வையிடவும்).
15 வீதமானவர்கள் மாத்திரமே அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள 85 வீதமானவர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை, எனவே அறிகுறிகளைக் காட்டாதவர்கள் பரிசோதிக்கப்படுவதில்லை என இரண்டாவது கூற்று குறிப்பிடுகின்றது. பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் (ஆய்வுகளின் பட்டியலுக்கு இணைப்பு 1 ஐப் பார்க்கவும்) அவை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், தரவுகளின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை காரணமாகவும், அவ்வாறு ஒரு வீதத்தை உறுதியாகக் கூறமுடியாது. தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் தென்படாமல் இருப்பதற்கும், தொற்றின் முழுமையான காலப்பகுதியில் எப்பொழுதும் அறிகுறிகள் தென்படாமல் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது; அதாவது அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே தொற்று பரவுவதற்கும், தொற்று ஏற்பட்டாலும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் இடையிலான வித்தியாசம். தற்போது கிடைக்கும் ஆய்வுகளுக்கு அமைய பரிசோதனையில் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்கள் பலரும் எந்த அறிகுறியையும் காட்டவில்லை (இதன் மதிப்பீடானது 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை காணப்படுகின்றது). இவர்களில் 75 சதவீதமானவர்களுக்கு பின்னர் அறிகுறிகள் ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்துகின்றது. எனவே 15 சதவீதமானவர்களுக்கு மாத்திரம் அறிகுறிகள் தென்படுகின்றது (அப்படி என்றால் 85 சதவீதமானவர்கள் எப்பொழுதும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை) என்பதை தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருதமுடியும்.
மூன்றாவது கூற்றானது இலங்கையின் ஒப்பீட்டு சோதனைகளின் வீதமாகும். ஒரு மில்லியன் மக்களில் முன்னெடுக்கப்படும் சோதனைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. அமைச்சர் குறிப்பிடும் எண்ணிக்கையானது மார்ச் 31 ஆம் திகதி அன்று சரியாக உள்ளது – அன்றைய தினம் இலங்கை மற்றும் தென் கொரியாவிற்கான புள்ளிவிபரம் முறையே 104 மற்றும் 8,008 ஆகும். எனினும், தென் கொரியாவில் உள்ளூரில் தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் ஜனவரி 22 ஆம் திகதி கண்டறியப்பட்டார், இலங்கையில் முதலாவது நபர் கண்டறியப்பட்டது மார்ச் 09 ஆம் திகதி ஆகும். முதலாவது நபரை கண்டறிவதில் ஏற்பட்ட காலத்தை மதிப்பிட்டால், தென்கொரியாவிற்கு 159 ஆகவும், இலங்கைக்கு 104 ஆகவும் (23 ஆவது நாளில்) குறைந்த ஒப்பீட்டு வேறுபாட்டைத் தருகின்றது.
தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது பரிசோதனைகளினால் கண்டறியப்படவில்லை, அறிகுறிகள் இல்லாததால் கண்டறியப்படவில்லை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை வசதிகளினால் கண்டறியப்படவில்லை என்ற வாதங்களை முன்வைத்து இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையானது உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகம் என அமைச்சர் தெரிவிக்கின்றார். அறிகுறிகள் அற்ற தன்மை, மட்டுப்படுத்தப்ட்ட சோதனைகள் அவரது முழுமையான கருத்துக்கு பொருத்தமான காரணங்களாக அமைந்தாலும், அவர் குறிப்பிடும் வீதங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக அமைகின்றன.
எனவே, நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
பின்னிணைப்பு 1: பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தொற்று ஏற்பட்டாலும் அறிகுறி இல்லாதவர்கள் மூலமான தொற்றுப்பரவலின் பங்கு
மூலம்
- உலக சுகாதார ஸ்தாபனம், கோவிட் 19 – வெர்ச்சுவல் பத்திரிகையாளர் சந்திப்பு, 1 ஏப்ரல் 2020 https://www.who.int/docs/default-source/coronaviruse/transcripts/who-audio-emergencies-coronavirus-press-conference-full-01apr2020-final.pdf?sfvrsn=573dc140_2 [Last accessed 20 May 2020]
- சுட்டோன் டி மற்றும் பிறர், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு SARS-CoV-2 பரிசோதனை, நியூ இங்க்லன்ட் மருத்துவ சஞ்சிகை, 13 ஏப்ரல் 2020
- மிசுமோட்டோ கே மற்றும் பிறர், டயமண்ட் பிரின்ஸ் சொகுசுக் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்படாமல் தொற்றைக் கொண்டிருப்பவர்களின் பங்கினை மதிப்பிடுதல், யோகோஹோமா, ஜப்பான், 2020, EuroSurveillance, 12 மார்ச் 2020
- கிம்பால் ஏ மற்றும் பிறர், கிங் கவுன்டி – வோஷpங்டனிலுள்ள நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களின் அறிகுறியற்ற ஆனால் தொற்று உள்ளவர்கள் மற்றும் நோய் அறிகுறிகள் தோன்றும் காலப்பகுதியில் தொற்று ஏற்பட்டவர்கள், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு தொடர்பான வாராந்த அறிக்கை, 27 மார்ச் 2020
- டே எம், கோவிட் -19: இத்தாலிய கிராமத்தில் அறிகுறிகள் இன்றி தொற்று உள்ளவர்களை கண்டறிவதுடன், தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றை இல்லாது செய்தல், பிரிட்டன் மருத்துவ சஞ்சிகை, 27 மார்ச் 2020
- குட்ஜார்ட்சன் டி மற்றும் பிறர், ஐஸ்லாந்து சனத்தொகையில் SARS-CoV-2 பரவல், நியூ இங்க்லன்ட் மருத்துவ சஞ்சிகை, 14 ஏப்ரல் 2020
- டே எம், கோவிட் – 19: ஐந்தில் நான்கு பேர் அறிகுறிகள் இன்றி தொற்றுக்குள்ளானவர்கள் – சீனாவின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன, பிரிட்டன் மருத்துவ சஞ்சிகை, 2 ஏப்ரல் 2020
- வான்வன் எஸ், ஃபெங்க் எல், ஜன்ரென் பி, ஜியான் சி, ஸிப்பிங் எம், nஷலென் எல், … என்பு சி (2020). ஷிஜியாங் மாகாணத்தில் பரவிய 2019 கொரோனா வைரஸ் குடும்பத்தின் தொற்றுநோய் பண்புகள், http://rs.yiigle.com/yufabiao/1184842.htm