பவித்ரா வன்னியாராச்சி

கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.

"

நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.

அத தெரண | மே 20, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, 2020 மே 01 முதல் 20 வரையான காலப்பகுதியில் கொவிட் – 19 “சமூகத்தொற்றாக” மாறவில்லை என அமைச்சர் குறிப்பிடுகின்றார் என FactCheck விளங்கிக்கொள்கின்றது.

சமூகத்தொற்று என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் பின்வருமாறு வரையறுக்கின்றது:

“பின்வரும் காரணிகளை (ஆனால் இவை மாத்திரம் என மட்டுப்படுத்தப்படவில்லை) மதிப்பிடுவதன் மூலமாக நாடுகள் / பகுதிகள் / பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையிலான உள்ளூர்த் தொற்றுக்கள் பரவுதல்:

(1)        தொற்றுச்சங்கிலியுடன் தொடர்பற்ற அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள்,

(2)        சென்டினல் ஆய்வக கண்காணிப்பில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள், மற்றும்

(3)        நாடு / பிரதேசம் / பகுதிகளின் பல இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல நோய்த்தொற்றுக் குழுக்கள்”

அதாவது, உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றாளர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்களின் தொற்றின் சங்கிலியைக் கண்டறிய முடியாத போது சமூகத்தொற்று நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து கொவிட் – 19 தொற்றாளர்களையும் சுகாதார அமைச்சு இரண்டு குறிப்பிட்ட குழுக்களின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதன் ஆரம்பத்தைக் கண்டறிந்துள்ளது: (1) வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் (2) இலங்கை கடற்படை வீரர்கள். இது அமைச்சரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றது.

எனினும், தொற்றின் பரவல் குறித்து நம்பிக்கையுடன் இருப்பது தற்போது காணப்படும் பரிசோதனைகளின் வலுவான தன்மையைப் பொறுத்தே உள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் தரவுகளை மாத்திரமே சுகாதார அமைச்சு வெளியிடுகின்றது, மாறாக பரிசோதனைகளின் நோக்கம் குறித்து வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக அடையாளம் காணப்பட்ட இரண்டு நோய்த்தொற்றுக் குழுக்கள் தவிர்த்து, போதுமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. பரிசோதனைகள் மிகவும் குறைவாக முன்னெடுக்கப்படுவதுடன், இந்தக் குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு மாத்திரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டால், சமூகத்தொற்றானது சில காலம் கண்டறியப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கொவிட் – 19 நோயாளர்கள் பலரும் சில காலத்திற்கு அறிகுறிகள் எதனையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது தொற்றின் முழுமையான காலப்பகுதி வரையில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேவேளை, கொவிட் – 19 இனால் உயிரிழந்ததாக கருதப்படும் எந்தவொரு நபரின் உடலும் தகனம் செய்யப்பட வேண்டும் என 2020 ஏப்ரல் 11 திகதியிடப்பட்ட வர்த்தமானி இல.2170/08 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் அவ்வாறான எந்தவித தகனங்களும் இடம்பெறவில்லை. இது சமூகத்தொற்று ஏற்படவில்லை என்ற அதிகாரிகளின் கருத்துடன் பொருந்திப் போகின்றது.

முடிவாக (அ) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் அடையாளம் காணப்பட்ட குழுக்கள் தவிர்த்து எந்தவித தொற்றாளர்களும் கண்டறியப்படவில்லை, அத்துடன் (ஆ) 2020 மே 01 முதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எந்தவிதமான தகனங்களும் அமுல்படுத்தப்படவில்லை என்பது அமைச்சரின் கூற்றுக்கு ஆதரவாக இருக்கின்றது.

எனவே, அமைச்சரின் கூற்றினை நாங்கள் “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்