உண்மைச் சரிபார்ப்புகளும்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைப்பின் அடிப்படையில் உள்நாட்டிலும் எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் திரவ பெற்றோலிய வாயு வகைகளுக்கான சரியான புதிய விலைகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்தக் கூற்றினை FactCheck ஆராய்ந்தது. எரிபொருள் விலைகளை எந்த முறையில் பெற்றுக்கொண்டார் என்பதை அவர் தனது பேச்சில் குறிப்பிடாத போதும், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என பிரேமதாச வாதிட்டதன் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அரசாங்கம் தாம் பயன்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை முழுமையாக பொதுவெளியில் வெளியிடவில்லை. எனினும், சூத்திரத்தில் இருந்து பெறப்பட்ட மொத்த மதிப்புக்களை நிதி அமைச்சு இரண்டு செய்தி அறிக்கைகளில் வழங்கியிருந்தது. இதனுடன், இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளையும் பயன்படுத்தி மீதமுள்ள மாறிகளைக் கண்டறிவதற்காக கணக்கீட்டை FactCheck மாற்றியமைத்தது (அட்டவணை 1).
92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றுக்கு மாத்திரமே தரவுகள் கிடைக்கப்பெற்றதனால், FactCheck இந்த எரிபொருட்களுக்கு மாத்திரம் மதிப்பீடுகளை முன்னெடுத்தது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, சிங்கப்பூர் பிளட்ஸ் (Platts) விலையானது ஒரு பீப்பாய் பெற்றோலுக்கு 42.50 அமெரிக்க டொலர்களாவும், ஒரு பீப்பாய் டீசலுக்கு 44.17 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. அன்றைய தினம் நாணய மாற்று வீதம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 181.83 ரூபாவாகும். இந்தப் புள்ளிவிபரங்களை உள்ளீடாகப் பயன்படுத்தி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 105 ரூபா மற்றும் ஒரு லீற்றர் டீசலின் உச்சபட்ச சில்லறை விலை 71 ரூபா எனவும் சூத்திர விலையை FactCheck மதிப்பிட்டது. இந்தக் கணக்கீடுகளில் முழுமையான எரிபொருள் விலை சூத்திரம் பயன்படுத்தப்படாத காரணத்தினால், மேலே உள்ள மதிப்பீட்டில் இருந்து 3 சதவீதம் பிழைக்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அவ்வாறு பிழைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டாலும், பெற்றோலுக்கான மிகக்குறைந்த மதிப்பீட்டு விலை 102 ரூபாவும், டீசலுக்கு 68 ரூபாவும் ஆகும். இது பிரேமதாச குறிப்பிட்ட விலைகளை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
எனினும், விலை சூத்திரத்தின் பிரகாரம் விலைகளைக் குறைப்பதுடன் மேலதிகமாக அரசாங்கத்தின் எரிபொருட்கள் மீதான வரியைக் (முக்கியமாக சுங்க வரி மற்றும் கலால் வரி) குறைப்பதன் மூலமாகவும் எரிபொருட்களின் விலையைக் குறைக்க முடியும். மேலதிகமாக பெற்றோலுக்கு 25 ரூபா மற்றும் டீசலுக்கு 10 ரூபா வரியினைக் குறைப்பதன் மூலமாக பிரேமதாசவினால் வலியுறுத்தப்பட்ட விலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பிரேமதாச வலியுறுத்திய விலைகளை கொண்டுவரமுடியும் என்ற போதும், அறிக்கையில் குறிப்பிட்டது போன்று உலக சந்தையில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தினால் கிடைக்கும் விலை இதுவல்ல.
எனவே, இந்தக் கூற்றினை ‘பகுதியளவில் உண்மையானது‘ என FactCheck வகைப்படுத்துகின்றது.
2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, ஒரு பீப்பாய் பெற்றோல் மற்றும் டீசலின் சிங்கப்பூர் பிளட்ஸ் (Platts) விலை முறையே 19.45 மற்றும் 24.14 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 76 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 48 ரூபாவாகவும் எந்தவித வரிகளையும் குறைக்காமலே அரசாங்கத்தினால் குறைக்க முடியும்.
Additional Note
மூலம்
- இலங்கை மத்திய வங்கி, பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம், செய்தி வெளியீடு (10 மார்ச் 2020), பார்வையிட: https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/26620522-634e-4815-b91c-f6022f4bff60/World_fuel_price_10.03.2020.pdf [last accessed: 6 May 2020]
- இலங்கை மத்திய வங்கி, பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம், செய்தி வெளியீடு (30 ஏப்ரல் 2020), பார்வையிட: https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/c31fe61c-da96-4160-baf4-68c4247c8a85/World_fuel_price_30.04.2020.pdf [last accessed: 6 May 2020]
- இலங்கை மத்திய வங்கி, குறியீட்டு ஐக்கிய அமெரிக்க டொலர் உடன் செலாவணி வீதம் (1 அமெரிக்க டொலருக்கு ரூபா) பார்வையிட: https://www.cbsl.gov.lk/rates-and-indicators/exchange-rates/daily-indicative-usd-spot-exchange-rates [last accessed: 24 March 2020]
- நிதி அமைச்சு, ஊடக வெளியீடு (31 டிசம்பர் 2018), பார்வையிட: http://www.treasury.gov.lk/web/guest/article/-/article-viewer-portlet/render/view/retail-prices-of-auto-fuels-as-at-december-19-2018-as-per-fuel-pricing-mechanism [last accessed: 24 March 2020]
- நிதி அமைச்சு, ஊடக வெளியீடு (16 ஒக்டோபர் 2018), பார்வையிட: www.treasury.gov.lk/documents/10181/606187/PRESS+RELEASE+-+Fuel+Formula20181016/acd8b96e-fae4-46b5-ae30-25086e16134e?version=1.0 [last accessed: 24 March 2020]
- சங்க ஜயசிங்க, எரிபொருள் விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால் இலங்கையின் பெற்றோல், டீசல் விலைகள் குறைந்திருக்கும்: சஜித், EconomyNext (21 பெப்ரவரி 2020), பார்வையிட: https://economynext.com/sri-lankas-petrol-diesel-prices-lower-if-price-formula-was-in-place-sajith-52488/ [last accessed: 24 March 2020]
- இலங்கை சுங்கம், சுங்க கட்டண மாற்றங்கள், புதுப்பிக்கப்பட்ட சுங்க கட்டணங்கள் (12 ஜுன் 2019), பார்வையிட: http://www.customs.gov.lk/public/files/tariff/Import_Tariff_2019.12.18.zip [last accessed: 25 March 2020]
- இலங்கை சுங்கம், சுங்க கட்டண மாற்றங்கள், சுங்க இறக்குமதி வரி பொதுத்தள்ளுபடி (12 ஜுன் 2019), பார்வையிட: http://www.customs.gov.lk/public/files/tariff/general_waiver_on_petrol_and_diesel_effective_from_12.06.2019.pdf [last accessed: 25 March 2020]
- இலங்கை சுங்கம், சுங்க கட்டண மாற்றங்கள், சுங்க இறக்குமதி வரி பொதுத்தள்ளுபடி (12 ஜனவரி 2019), பார்வையிட: http://www.customs.gov.lk/public/files/tariff/waiver20190112.pdf [last accessed: 25 March 2020]