அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

அது அப்பட்டமான பொய். […] கோவிட் 19 பெருந்தொற்று 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் பரவியதுடன் வாகனங்களின் இறக்குமதியும் அதனுடன் நிறுத்தப்பட்டது. […] நாடு ஆறு மாத காலங்கள் முடக்கப்பட்டிருந்ததுடன் அதன் விளைவாக சில துறைகள் சரிவைச் சந்தித்தன. அரசாங்கத்தின் வருமானம் அவ்வாறான காரணங்களால் வீழ்ச்சியடைந்ததே தவிர வர

அருண | மே 27, 2024

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம் அவரது பதவிக்காலத்தின்போது வருமானம் குறைந்தது தொடர்பில் பத்திரிகை நேர்காணல் ஒன்றின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், 2020 ஆம் ஆண்டளவில் வருமான இழப்புகளுக்கு முதன்மைக் காரணம் (1) மோட்டார் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது, மற்றும் (2) கோவிட் 19 பெருந்தொற்று – 2020 ஆம் ஆண்டில் வரிக்குறைப்பினால் வருமானம் குறையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, நிதி அமைச்சின் ஆண்டறிக்கை 2023, வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2022 மற்றும் மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2023 ஆகியவற்றிலிருந்து வரி வருமான இழப்பை FactCheck.lk கணக்கிட்டது.

மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்தியதால் ஏற்பட்ட பாதிப்புகள் – 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்கள் மீதான கலால் வரி ரூ.82 பில்லியனால் குறைந்துள்ளதை நிதி அமைச்சின் தரவு சுட்டிக்காட்டுகிறது. அரச வருமானத்தின் மொத்த வீழ்ச்சியில் இது 15.6% மட்டுமே ஆகும்.

கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் – 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கோவிட் 19 முடக்கத்தின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பெயரளவு மொ.உ.உ 1.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதை மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு காட்டுகிறது. மொ.உ.உற்பத்தியின் விகிதத்தில் வருமானம் குறைந்தால், இது ரூ.25 பில்லியன் வீழ்ச்சியாக இருக்கும். இது மொத்த வீழ்ச்சியின் 4.7% ஆகும் (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).

வரிக் குறைப்பின் தாக்கம் – 2019 இறுதி முதல் 2020 ஆரம்பத்திற்கு இடையில், அரசாங்கம் பல்வேறு வரிக்கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது: (1) பல்வேறு வரிகளை அகற்றுதல், (2) வரி விகிதங்களைக் குறைத்தல் என்பன இதில் அடங்கும்.

2020 இல் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, கார்பன் வரி மற்றும் வரி மீள்கொடுப்பனவு தீர்வை என்பன நீக்கப்பட்டதால் இந்த வரிகள் மூலமான வருமானங்கள் இல்லாது போனது. இந்த வரிகள் நீக்கப்பட்டதால் மொ.உ.உ வளர்ச்சி சரிசெய்யப்பட்ட வருமானத்தில் ரூ.99 பில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டது, இது வருமானக் குறைப்பில் சுமார் 19% ஆகும்.

வரி மீளாய்வுகளின் பின்னர் பெறுமதி சேர் வரி (VAT), கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றின் மூலமான வரி இழப்பை அறிக்கையிடப்பட்ட தரவுகளிலிருந்து கணக்கிடலாம். இந்த இழப்பின் 1.7 சதவீதத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சுருக்கத்தைக் காரணமாகக் கூறலாம். வரிக்கொள்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்பு, பெறுமதி சேர் வரிக்கு ரூ.207 பில்லியன் (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்), கூட்டிணைக்கப்பட்ட மற்றும் தனிநபர் வருமான வரிக்கு ரூ.155 பில்லியன் (மேலதிகக் குறிப்பு 3 ஐப் பார்க்கவும்) ஆகும்.

மொத்தத்தில், 2019 ஆம் ஆண்டிலிருந்து மொத்த வருமான இழப்பில் வரி நீக்கம் அல்லது குறைப்பு காரணமாக ரூ.461 பில்லியன் (சுமார் 90%) இழக்கப்பட்டுள்ளதாக மொ.உ.உ சரிசெய்யப்பட்ட வருமான மதிப்பீடுகள் காட்டுகின்றன. கப்ரால் குறிப்பிட்டபடி, மோட்டார் வாகன வரி மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட வருமான இழப்பு ரூ.107 பில்லியனுக்கு மேல் ஆகாது.

வருமான இழப்பிற்கான (இறக்குமதி வீழ்ச்சி மற்றும் கோவிட் 19) கப்ராலின் விளக்கம் தரவுகளுடன் முரண்படுகிறது. தரவுகளால் (வரிக் குறைப்புகள்) ஆதரிக்கப்படும் விளக்கத்தை ‘அப்பட்டமான பொய்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் அவர் இந்தத் தவறை மேலும் மோசமாக்குகிறார்.

ஆகவே, கப்ராலின் அறிக்கையை நாங்கள் முற்றிலும் தவறு என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு 1: பொதுவாக, வரிக் கட்டமைப்பில் மாற்றங்கள் எதுவும் இல்லாதபோது, பெயரளவு மொ.உ.உற்பத்தியின் விகிதத்துடன் வரி வருமானம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிகக் குறிப்பு 2: நிதிச் சேவைகள் தவிர ஏனையவற்றுக்கான VAT 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கான மொத்த பெறுமதி சேர் வரியை (நிதிச் சேவைகள் தவிர) 15 சதவீதத்தால் வகுத்து 8 சதவீதத்தால் பெருக்கி, பின்னர் 1.7% பெயரளவு மொ.உ.உ குறைப்பினால் சரிசெய்வதன் மூலம் VAT வருமான இழப்பைக் கணக்கிட முடியும்.

மேலதிகக் குறிப்பு 3: இது நிறுத்திவைத்தல் வரி (WHT), உழைக்கும்போதே செலுத்தும் வரி (PAYE), பொருளாதார சேவைக் கட்டணம் (ESC) ஆகியவை மூலமான வருமானத்தை உள்ளடக்கியது. இவை 2019/2020 இல் மாற்றப்பட்டன அல்லது நீக்கப்பட்டன.



மூலம்

Ministry of Finance, Annual Report 2023.

Budget Estimates 2022, Ministry of Finance.

Central Bank Annual Economic Review 2023.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன