உண்மைச் சரிபார்ப்புகளும்
“…இன்று, 2024 ஆம் ஆண்டளவில், பங்களாதேஷின் ஏற்றுமதி ஐ.அ.டொ 87 பில்லியனை எட்டியுள்ளது. வியட்னாம் பாரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, ஐ.அ.டொ 464 பில்லியனை ஏற்றுமதி செய்கிறது. இலங்கையில் எங்கள் ஏற்றுமதிகள் இன்றும் ஐ.அ.டொ 16 பில்லியனாக (மட்டுமே) உள்ளன.”
ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக 1991 ஆம் ஆண்டு முதல் இலங்கையை விட பங்களாதேஷ் மற்றும் வியட்னாமின் பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி வாதம் செய்கிறார். அவரது வாதத்திற்கு ஆதரவு சேர்ப்பதற்காக, இந்த மூன்று நாடுகளினதும் 1991 ஆம் ஆண்டு முதல் 2023 வரையான ஏற்றுமதி பெறுமதிகளை மேற்கோள் காட்டுகின்றார். பங்களாதேஷ் மற்றும் வியட்னாமின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி இலங்கையை விட பல மடங்கு அதிகமாக உள்ளதைப் பெறுமதிகள் காட்டுகின்றன.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக வங்கியால் அறிக்கையிடப்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மொ.உ.உ வளர்ச்சி புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.
அமைச்சர் குறிப்பிடும் ஆறு பெறுமதிகளில் ஐந்தில் முரண்பாடுகள் உள்ளதை FactCheck.lk கண்டறிந்தது.
உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் ஏற்றுமதி பெறுமதி ஐ.அ.டொ 2.1 பில்லியன், ஐ.அ.டொ 2.2 மில்லியன் அல்ல. அதேபோன்று இலங்கையின் ஏற்றுமதி பெறுமதி ஐ.அ.டொ 2.6 பில்லியன், ஐ.அ.டொ 2.8 பில்லியன் அல்ல. எனினும் அமைச்சர் வியட்னாமிற்குக் குறிப்பிடும் பெறுமதியான ஐ.அ.டொ 3 பில்லியன் என்பது உலக வங்கியின் தரவுடன் பொருந்துகின்றது.
அதேபோன்று, 2023 ஆம் ஆண்டில் (கிடைக்கும் சமீபத்திய தரவு) பங்களாதேஷின் ஏற்றுமதியை ஐ.அ.டொ 58 பில்லியன் என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது. இது அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று ஐ.அ.டொ 87 பில்லியன் அல்ல. இலங்கையின் ஏற்றுமதி ஐ.அ.டொ 17 பில்லியன், ஐ.அ.டொ 16 பில்லியன் அல்ல. மேலும் வியட்னாமின் ஏற்றுமதி ஐ.அ.டொ 374 பில்லியன், ஐ.அ.டொ 464 பில்லியன் அல்ல.
எனினும் அமைச்சர் குறிப்பிடும் கருத்தைக் கவனத்தில் கொண்டால், இந்த மூன்று நாடுகளும் 1991 ஆம் ஆண்டில் ஐ.அ.டொ 3 பில்லியனுக்குக் குறைவான ஏற்றுமதிகளைக் கொண்டிருந்தன. 2024 ஆம் ஆண்டில் (2023 இறுதியில்) இலங்கையின் ஏற்றுமதிகள் ஏழு மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளன. அதேவேளை பங்களாதேஷின் ஏற்றுமதிகள் 28 மடங்காலும் வியட்னாமின் ஏற்றுமதிகள் 126 மடங்காலும் அதிகரித்துள்ளன.
எனவே அமைச்சர் குறிப்பிடும் பல பெறுமதிகளில் முரண்பாடுகள் இருந்தாலும் (அவற்றில் சில அதிக வித்தியாசத்தைக் கொண்டுள்ளன) சரி செய்யப்பட்ட பெறுமதிகளும் அமைச்சர் குறிப்பிட வரும் விடயத்தை ஆதரிக்கின்றன. அதாவது 1991 ஆம் ஆண்டிற்கும் 2023 ஆம் ஆண்டிற்கும் இடையே பங்களாதேஷ் மற்றும் வியட்னாமின் ஏற்றுமதி வளர்ச்சி இலங்கையை விட பல மடங்கு அதிகமாகும்.
எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
FactCheck.lk என்பது வெரிட்டே ரிசேர்ச் மூலம் நடத்தப்படும் ஒரு தளமாகும்.
மேலும் பல உண்மைச் சரிபார்ப்புக்களுக்கு www.factcheck.lk என்ற எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள்.
மூலம்
மூலம்: உலக வங்கியால் அறிக்கையிடப்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மொ.உ.உ வளர்ச்சி புள்ளிவிபரங்கள்