உண்மைச் சரிபார்ப்புகளும்
அமைச்சர் தனது அறிக்கையில் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்:
1) பெறுமதிகள் தொடர்பில்: வரி வருமானங்கள் 2014 ஆம் ஆண்டில் ரூ.1,050 பில்லியனில் இருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ரூ.1,700 பில்லியனாக அதிகரித்தது. தொடர்ந்து வந்த அரசாங்கம் வரிகளை ரூ.520 பில்லியனால் குறைத்தது.
2) முடிவுகள்: முந்தைய அரசாங்கத்தின் கீழ் வரி வசூலிப்பு (இ) அதிக சுமையானது (ஆ) யுத்த காலத்தை விட அதிகமானது.
முதலாவது கூற்றை ஆராய்வதற்கு 2020 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது. 2014 ஆம் ஆண்டில் வரி வருமானம் அமைச்சர் குறிப்பிட்டது போன்று ரூ.1,050 பில்லியன் ஆகும். நல்லாட்சி அரசாங்கத்தின் 2015 – 2019 ஆட்சிக் காலத்தில், 2019 ஆம் ஆண்டில் வரி வருமானம் ரூ.1,735 பில்லியன் என்ற உச்சத்தைத் தொட்டது. இது அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியுடன் நெருங்கி இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் வரி வருமானம் ரூ.1,217 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இது ரூ.518 பில்லியன் வீழ்ச்சி என்பதுடன், இதுவும் அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது.
இரண்டாவது கூற்றை ஆராய்வதற்கு, காலப்போக்கில் வரிகளின் அளவை மதிப்பிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானத்தின் சதவீதத்தை FactCheck.lk கருத்தில் கொள்கிறது. 1983 முதல் 2009 காலப்பகுதியில் (யுத்த காலப்பகுதியில்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்ச வரி வருமானமான 12.7% 2003 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்த பட்ச வரி வருமானமான 19.5% 1985 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்த பட்ச வரி வருமானமான 12.5% 2017 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்த பட்ச வரி வருமானம் (12.5%) யுத்த காலத்தில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்ச வரி வருமானத்தை (அதாவது 2003 ஆம் ஆண்டில் 12.7%) விடக் குறைவாகும். 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானம் 11.6%, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமான வீதங்களில் உலகளவில் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. உலகளாவிய தரநிலைகளின் அடிப்படையில் அதிகமாக இல்லை. அமைச்சரின் இரண்டாவது கூற்று தரவுடன் பொருந்தவில்லை.
ஆகவே அமைச்சரின் கூற்றை ‘பகுதியளவில் சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
மேலதிகக் குறிப்பு: வெரிட்டே ரிசேர்ச் நடத்தும் PublicFinance.lk தளம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானம் மற்றும் பிற நாடுகளுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது போன்ற தகவல்களை வழங்குகிறது. கூடுதல் விபரங்களைப் பார்ப்பதற்கு: http://bitly.ws/fTpT.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
Additional Note
மூலம்
நிதியமைச்சு, ஆண்டறிக்கை 2020, பார்வையிட: http://oldportal.treasury.gov.lk/web/guest/publications/annual-report [last accessed: 11 August 2021].