புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகின்றார்

"

2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து ஐ.அ.டொ 6.57 பில்லியன் பணவனுப்பல்கள் இலங்கைக்குக் கிடைத்தது. இந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் பணி புரிகின்றார்கள்.

பாராளுமன்றம் | ஜூன் 19, 2025

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, புலம்பெயர் பணவனுப்பல்கள் மற்றும் அதன் பிராந்தியச் செறிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு கூற்றுகளை முன்வைத்தார்: (1) 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர் பணவனுப்பல்கள் மூலம் இலங்கை ஐ.அ.டொ 6.57 பில்லியனைப் பெற்றுள்ளது. (2) இலங்கையின் 80% வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்.

கூற்று 1: உரிமம் பெற்ற வங்கிகளிடம் இருந்து பெறப்படும் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பான புள்ளிவிபரங்கள், 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் மொத்த பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 6.57 பில்லியன் எனச் சுட்டிக்காட்டுகின்றது. இது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் பெறுமதியுடன் பொருந்துகின்றது.

கூற்று 2: இந்தக் கூற்று தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாகத் தெரிகின்றது. எனினும், தற்சமயம் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் அறிக்கையிடும் உத்தியோகபூர்வ அரச மூலங்கள் எதுவும் இல்லை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் (SLBFE) இருந்து கூட எந்தத் தரவுகளும் இல்லை. அவ்வாறான தரவு இல்லாத நிலையில், புலம்பெயர் பணியாளர்களின் பிராந்தியப் பரவலைச் சுட்டிக்காட்டுவதற்குக் கிடைக்கும் சிறந்த குறிகாட்டி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான வருடாந்தப் புறப்பாடுகள் ஆகும். இது இலங்கை மத்திய வங்கியினால் அறிக்கையிடப்பட்டுள்ளது (ஆனால் இந்த அறிக்கையிடலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகக் குறிப்பு 1 இல் பார்க்கவும்).

2022 – 2024 இடைப்பட்ட காலப்பகுதியில் சராசரியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான சுமார் 80% புறப்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கே இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு தரவு (SLBFE இலிருந்து பெறப்பட்டது) காட்டுகின்றது. “80% (புலம்பெயர் தொழிலாளர்கள்) மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதி இந்த மூலத்திலிருந்து அல்லது அதிலிருந்து தோன்றிய ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகத் தெரிகின்றது.

மொத்தத்தில், புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருந்தாலும், கூற்று 1 இலங்கை மத்திய வங்கியின் தரவினால் ஆதரிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் தொழிலாளர்களின் செறிவு தொடர்பான கூற்று 2, வருடாந்த தொழிலாளர் புறப்பாடுகள் தொடர்பான உத்தியோகபூர்வத் தரவினைத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றது. இந்தத் தரவு சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும் (மேலதிகக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது) மொத்த புலம்பெயர் சனத்தொகையின் பரவல் தொடர்பில் கிடைக்கும் சிறந்த மாற்றாக இருக்கின்றது.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு 1: இலங்கை மத்திய வங்கியால் புறப்பாடுகள் என அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கை, பதிவுசெய்யப்பட்ட பணியாளர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கையுடன் பொருந்துகின்றது. எனினும், SLBFE இலுள்ள மூலங்களின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுத் தொகுப்பில் புறப்பாடுகள் அறிக்கையிடப்படவில்லை, மாறாக புறப்படுவதற்கான உத்தேசம் உள்ள பதிவுகளே அறிக்கையிடப்படுகின்றன. பதிவுசெய்தவர்களில் சிலர் புறப்படாமல் விடலாம், மற்றவர்கள் பதிவுசெய்யாமலே புறப்பட்டுச் செல்லலாம். நடப்பு ஆண்டு மட்டுமன்றி முந்தைய ஆண்டு புதிவுகளும், முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களுடைய பதிவுகளைப் புதிப்பித்தவர்களும் இந்தத் தரவில் உள்ளடக்கப்படுவதாக என SLBFE மூலங்கள் குறிப்பிடுகின்றன.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டேFactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளைFactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருடாந்தப் புள்ளிவிபரங்கள் 2023, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்.https://www.slbfe.lk/wp-content/uploads/2024/10/sodapdf-converted-18_compressed.pdf

 

வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2024 புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2024/statistical-appendix

தொழிலுக்காகப் புலம்பெயர்தல் பற்றிய இலங்கைக்கான தேசியக் கொள்கையும் செயற்பாட்டுத் திட்டமும் (2023 – 2027), தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு.  https://labourmin.gov.lk/wp-content/uploads/2023/11/National-Policy-and-National-Action-Plan-on-Migration-for-Employment-Sri-Lanka-2023-2027-English-Ver._compressed.pdf

 

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் பற்றிய காலாண்டுத் திரட்டு, இலங்கை மத்திய வங்கி.  https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/workers_remittances_and_labour_migration_bulletin_2024_q4_e.pdf

இலங்கை புலம்பெயர்தல் மற்றும் இடப்பெயர்வு, தேசிய மதிப்பீட்டு அறிக்கை 2023, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம். https://www.redcross.lk/wp-content/uploads/2024/04/SL-Natioanl-Assessment-Report-2023.pdf

UN DESA, சர்வதேச புலம்பெயர்ந்தோர் மக்கள்தொகை 2024 POP/DB/MIG/Stock/Rev. 2024 (பதிவிறக்கக்கூடிய தரவுத்தொகுப்பு). https://www.un.org/development/desa/pd/content/international-migrant-stock

ஆர்யசிங்க, ரவிநாத (2020). இலங்கையின் பொருளாதார மீட்சியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பங்கு: சவால்களும் வாய்ப்புகளும். வெளிநாட்டு உறவுகள் அமைச்சு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன