இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் அறிக்கையிடல் குறித்து FactCheck.lkஇன் கவலைகள்
FactCheck.lk இன் விளக்கம்
இலங்கையின் அலுவல்சார் ஒதுக்குகள் தொடர்பில் முழுமையான புரிதலின்றி தவறாக அரசியல்வாதிகளும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களும் வெளியிட்ட குறைந்தது ஐந்து அறிக்கைகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் FactCheck.lkஆராய்ந்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் தொடர்பில் அதிகாரிகள் தெரிவித்த பெரும்பாலான கூற்றுகள் தவறாக இருப்பதற்கான காரணங்களை இந்த FactCheck.lk விளக்கம் விபரிக்கின்றது.
இந்த விளக்கம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதலாவது பிரிவு வெளிநாட்டு ஒதுக்குச் சொத்து என்றால் என்னவென்று வரையறுக்கின்றது, இலங்கை கொண்டிருக்கும் ஒதுக்கு சொத்துக்களின் வகைகளை இரண்டாவது பிரிவு குறிப்பிடுகின்றது, வெளிநாட்டு ஒதுக்குகள் என்பதற்கான சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைலிருந்து இலங்கை மத்திய வங்கி அறிக்கையிடும் ஒதுக்குகள் எவ்வாறு விலகிச் செல்கின்றன என மூன்றாவது பிரிவு குறிப்பிடுகின்றது, இந்த வகையான அறிக்கையிடல் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் எவ்வாறு மீண்டும் குறிப்பிடப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றது என்பதை நான்காவது பிரிவு காட்டுகின்றது.
ஒதுக்குச் சொத்து என எது தகுதிபெறுகின்றது?
வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குச் சொத்து எனக் கருதப்படுவதற்கான சர்வதேசத் தரநிலை, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) சென்மதி நிலுவைக் கையேட்டின் ஆறாவது பதிப்பில் (BPM6) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிடல் தரநிலையே இலங்கையால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பின்வரும் அனைத்து அளவுகோல்களையும் பூர்த்திசெய்யும் ஒன்று ஒதுக்குச் சொத்து என வரையறுக்கப்படுகின்றது, இது எளிமையாக விளக்கப்படுகின்றது: (i) வெளிநாட்டு உரிமைகோரலைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது குறிப்பிடத்தக்க தூய்மையான தங்க வடிவில் இருக்க வேண்டும், (ii) நாணய அதிகாரசபைகளுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது அவற்றின் நேரடி மற்றும் பயனுள்ள கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் (iii) நிபந்தனையற்ற வடிவத்தில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் (அதாவது, உடனடியாக மாற்றக்கூடியது) (iv) சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயங்களில் இருக்க வேண்டும் (v) உயர் தரத்தில் இருக்க வேண்டும் (பொதுவாக). ஒரு சொத்து இந்த அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்திசெய்யாவிட்டாலும் அது ஒதுக்குச் சொத்தாகத் தகுதிபெறாது.
இலங்கை வைத்திருக்கும் வெளிநாட்டு ஒதுக்குகளின் வகைகள் என்ன?
இலங்கையின் அறிக்கையிடப்பட்ட வெளிநாட்டு ஒதுக்குகள் ஆறு வகைகளைக் கொண்டது: (i) தங்கம், (ii) சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சிறப்பு எடுப்பனவு உரிமைகள் (SDR) (சர்வதேச நாணய நிதியத்தால் கடனளிக்கப்படும் நிதியைக் குறிக்கின்றது), (iii) சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையின் ஒதுக்கு நிலை (இது சர்வதேச நாணய நிதியத்தில் நாட்டின் வைப்புத் தொகையைப் பிரதிபலிக்கின்றது), (iv) உடனடியாக மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் (வெளிநாட்டு வங்கிகளிலுள்ள பணம் மற்றும் நிலையான வைப்புகள் மற்றும் அமெரிக்க திறைசேரி போன்ற சந்தைப்படுத்தக்கூடிய பிணையங்கள்), (v) பரஸ்பர நாணயப் பரிமாற்றல்கள் மற்றும் முன்கூட்டிய பரிமாற்ற விகித ஒப்பந்தங்கள் போன்ற பெறுதி நிதியியல் சாதனங்கள், மற்றும் (vi) மேலேயுள்ள வகைப்படுத்தலின் கீழ் வராத ஏனைய வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள்.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையிடப்படும் ஒதுக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் தரநிலைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இலங்கை மத்திய வங்கி அதன் “மொத்த அலுவல்சார் வெளிநாட்டு ஒதுக்குகளை” எவ்வாறு அறிக்கையிடுகின்றது என்பது தவறான புரிதலுக்கான முக்கிய காரணமாக அமைகின்றது. ஒதுக்குச் சொத்து எனத் தகுதிபெறுவதற்கான சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்திசெய்யாத சொத்தை அறிக்கையிடல் உள்ளடக்குகின்றது. குறிப்பாக சீன மக்கள் வங்கியின் (PBoC) RMB 10 பில்லியன் (≈ ஐ.அ.டொ 1.4 பில்லியன்) பரஸ்பர நாணயப் பரிமாற்றல் அறிக்கையிடலில் உள்ளடக்கப்படுகின்றது. இந்த நாணயப் பரிமாற்றல், பயன்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க பூர்த்திசெய்யப்படாத நிபந்தனைகளுக்கு உட்பட்டது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). அதாவது இலங்கை சுதந்திரமாக அணுகுவதற்கோ அல்லது நிதியைப் பயன்படுத்துவதற்கோ முடியாது – இது சர்வதேச வரையறையின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றான ஒதுக்குச் சொத்து என்பது நிபந்தனையற்ற வடிவத்தில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் (அதாவது, உடனடியாக மாற்றக்கூடியது) என்பதை மீறுகின்றது. ஒதுக்குச் சொத்து எனத் தகுதிபெறுவதற்கான அளவுகோல்களைப் பூர்த்திசெய்யத் தவறியபோதும், PBoC நாணயப் பரிமாற்றலின் முழு பெறுமதியும் இலங்கையின் ஒதுக்கு அறிக்கையிடலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் அடிக்குறிப்புகளை ஆராய்ந்து பார்த்ததில், PBoC பரஸ்பர நாணயப் பரிமாற்றல் டிசம்பர் 2021 இல் முதன் முதலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அது இலங்கையின் ஒதுக்குகளில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் மே 2022 இல் ஒதுக்காகக் கணக்கிடப்படும் பரஸ்பர நாணயப் பரிமாற்றல் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளைக் கொண்டது என்பதை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியது.
இதனை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையும் உறுதிசெய்துள்ளது. அதன் அலுவலர் அறிக்கையில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகளுக்கும் (இலங்கை மத்திய வங்கியால் அறிக்கையிடப்பட்டபடி) பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகளுக்கும் (சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிட்டபடி) இடையேயான வேறுபாட்டை சர்வதேச நாணய நிதியம் தெளிவாக விளக்குகின்றது. சர்வதேச நாணய நிதியம் PBoC பரிமாற்றல் வசதியை அதன் பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகள் அறிக்கையிடலில் உள்ளடக்கவில்லை. இலங்கை அறிக்கையிட்ட ஒதுக்குகளில் ஒரு பிரிவை மட்டுமே சர்வதேச நாணய நிதியம் “பயன்படுத்தக்கூடியது” எனக் கணக்கிடுகின்றது. இதன் மூலம் ஏனையவற்றை “பயன்படுத்த முடியாத” ஒதுக்குகள் என்கின்றது.
ஆனால் பயன்படுத்த முடியாத ஒதுக்கு என்பது ஒரு முரணாகும்: வரையறையின் அடிப்படையில் “பயன்படுத்த முடியாது” என்றால் அதை ஒதுக்கு சொத்தாக வகைப்படுத்த முடியாது. இது புதிதாக உருவான புதைபடிவம் எனச் சொல்வதைப் போன்றது, ஏனெனில் புதைபடிவம் என்றாலே அது புதிதாக இருக்க முடியாது.
இலங்கையின் ஒதுக்கு அறிக்கையிடல் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையுடன் ஒருமைப்பாட்டை பேணினால், அது அறிக்கையிடப்பட்ட அலுவல்சார் ஒதுக்கு பெறுமதியில் PBoC பரஸ்பர பரிமாற்றலைத் தவிர்த்திருக்கும். உதாரணமாக, மே 2025 இல் மத்திய வங்கி அலுவல்சார் ஒதுக்குகளை ஐ.அ.டொ 6.3 பில்லியன் என அறிக்கையிட்டிருந்தது. இதில் PBoC பரஸ்பர நாணயப் பரிமாற்றல் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையிடல் சர்வதேசத் தரநிலைகளுடன் இணங்கியிருந்தால் அது சுமார் ஐ.அ.டொ 4.9 பில்லியனை மட்டுமே அறிக்கையிட்டிருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெளிநாட்டு ஒதுக்குகளை தொடர்ந்து எவ்வாறு தவறாகக் குறிப்பிடுகின்றனர்?
உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்ட, உயர் மட்ட தீர்மானம் எடுப்பவர்களின் ஒதுக்குகள் தொடர்பான அறிக்கைகளில் பொதுவாக இரண்டு வகையான தவறுகள் உள்ளன.
PBoC பரஸ்பர நாணயப் பரிமாற்றல் (மேலேயுள்ள விளக்கத்தைப் பார்க்கவும்) போன்ற ஒதுக்குச் சொத்து என்பதற்கான சர்வதேச வரையறையைப் பூர்த்தி செய்யாத சொத்துக்களை உள்ளடக்கி ஒதுக்குகளை மிகைப்படுத்திக் கூறுவது முதலாவது தவறு ஆகும். இந்தத் தவறு புரிந்துகொள்ளப்படக்கூடியதுடன், உத்தியோகபூர்வ அறிக்கைகளில் ஒதுக்கு தொடர்பான தரவு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதில் இருந்து ஏற்படுகின்றது.
ஒதுக்குகளைக் கணக்கிடுவதற்கு இரண்டு வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி ஒதுக்குகளின் அதிகரிப்பை மிகைப்படுத்துவது இரண்டாவது தவறு ஆகும். இதற்கான ஆரம்பப் புள்ளி ஏப்ரல் 22 என மேற்கோள் காட்டப்படுகின்றது. இதன்போது ஒதுக்குகள் பூச்சியத்திற்கு அருகில் இருந்ததாகக் கூறப்படுகின்றது (இது சரியானது மற்றும் இதில் PBoC பரிமாற்றல் உள்ளடக்கப்படவில்லை). எனினும் இறுதிப் புள்ளி PBoC பரிமாற்றலை உள்ளடக்கிய ஒதுக்கு பெறுமதியைக் காட்டுகின்றது. இது ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பு குறித்த தவறான புரிதலுக்கு இட்டுச் செல்கின்றது. முதலாவது தவறு நிகழ்ந்திருந்தாலும் (“பயன்படுத்த முடியாத” PBoC பரிமாற்றலை உள்ளடக்குவது), இரண்டு காலப்பகுதிகளுக்கு இடையேயான ஒப்பீட்டில் ஒரே மாதிரியான கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த அறிக்கைகள் தவறானவை என மதிப்பிடப்பட்டிருக்காது.
துல்லியமான மற்றும் சரியான அறிக்கையிடலை உறுதிப்படுத்துவதற்கு, ஒதுக்கு பெறுமதியை மேற்கோள் காட்டும் எந்தவொரு அதிகாரியும் ஒரே முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். PBoC பரிமாற்றல் பெறுமதி உள்ளடக்கப்பட்டிருந்தால், ஏனைய காலப்பகுதிகளுக்கான ஒப்பீடுகளும் அதை உள்ளடக்கியிருக்க வேண்டும். பரிமாற்றலைத் தவிர்த்திருந்தால் ஒப்பீட்டுப் பெறுமதிகள் அனைத்தும் அதையே பின்பற்றியிருக்க வேண்டும். உதாரணமாக, நெருக்கடிக்குப் பின்னரான மீட்சியை விளக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் 2024 வருடாந்தப் பொருளாதார மீளாய்வு PBoC பரஸ்பர பரிமாற்றலை 2022 மற்றும் 2024 ஒதுக்குப் பெறுமதிகளில் உள்ளடக்கியது. சர்வதேசத் தரநிலைகளுக்கு இணங்க, பரிந்துரைக்கப்படும் அணுகுமுறைஎன்னவென்றால் “பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகள்” என சர்வதேச நாணய நிதியம் அறிக்கையிடும் ஒதுக்குகளில் ஏற்படும் மாற்றத்தை ஒப்பிடுவதாகும். இதில் ஒதுக்கு சொத்து என்பதற்கான வரையறையைப் பூர்த்தி செய்யாத PBoC நாணயப் பரிமாற்றல் போன்ற சொத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலதிகக் குறிப்பு 1: இலங்கை மத்திய வங்கி PBoC பரிமாற்றலுக்கான பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. எனினும் PBoC பரஸ்பர நாணயப் பரிமாற்றலை தற்போது வரை (மார்ச் 2025) பயன்படுத்த முடியாத ஒதுக்கு என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. பயன்படுத்துவதற்கான இந்தக் கட்டுப்பாடு எதிர்காலத்தில் எப்போதாவது நீக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் PBoC பரஸ்பர நாணயப் பரிமாற்றலை இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளின் ஒரு பகுதியாக சட்டபூர்வமாகக் கணக்கிட முடியும்.
மூலங்கள்:
இலங்கை மத்திய வங்கி. (2015, நவம்பர் 3). சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு தரவு தகவல் வெளியீட்டு தரநிலையில் இலங்கை இணைந்துள்ளது.https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20151103_Sri_Lanka_Subscribes_to_the_IMF%E2%80%99s_Special_Data_Dissemination_Standard_e.pdf.
இலங்கை மத்திய வங்கி. (n.d.). சர்வதேச ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டு செலாவணி திரவத்தன்மை. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/sdds/International%20Reserves%20and%20%20Foreign%20Currency%20Liquidity.pdf.
இலங்கை மத்திய வங்கி. (2024). வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2024. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2024
இலங்கை மத்திய வங்கி. (2023). வாராந்தக் குறிகாட்டிகள். https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators
சர்வதேச நாணய நிதியம். (2023). இலங்கை: நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதலாவது மீளாய்வு (IMF நாட்டின் அறிக்கை இல.23/12). https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/12/12/Sri-Lanka-First-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-542441
சர்வதேச நாணய நிதியம். (2009). சென்மதி நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேடு (6 ஆவது பதிப்பு). https://www.imf.org/external/pubs/ft/bop/2007/pdf/bpm6.pdf.
சர்வதேச நாணய நிதியம். (2023). SDR பிரிவில் IMF இன் ஒதுக்கு நிலை தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். https://www.imf.org/external/np/sta/ir/IRProcessWeb/pdf/faqapp.pdf
இலங்கை மத்திய வங்கி. (2023). இலங்கை மத்திய வங்கி சீன மக்கள் வங்கியுடன் பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஒப்பந்தத்தில் ஈடுகிறது. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/P.R_20210322_The%20Central%20Bank%20of%20Sri%20Lanka%20enters%20into%20a%20Bilateral%20Currency%20Swap%20Agreement_E.pdf
மல்லவாராச்சி. பி (பெப்ரவரி 9, 2022). இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி, அரசியல் நெருக்கடி. AP நியூஸ்1. https://apnews.com/article/covid-business-health-economy-sri-lanka-a742a0ebe7a7e0734960d68e49bed69a
விக்கிரமசிங்க, ஆர். (2023). ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் விழாவில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2023-02-08 அன்று சமர்ப்பித்த அரச கொள்கை தொடர்பான அறிக்கை. இலங்கைப் பாராளுமன்றம். https://parliament.lk/files/documents_news/2023/gov-policy-statement-en.pdf
டெய்லி மிரர் (ஜனவரி 10, 2022). 2021 ஆம் ஆண்டை ஐ.அ.டொ 3.1 பில்லியன் வெளிநாட்டு செலாவணி ஒதுக்குகளுடன் நிறைவுசெய்வதற்கு இலங்கை சீன பரஸ்பர பரிமாற்றலைப் பயன்படுத்தியுள்ளது. https://www.dailymirror.lk/business-news/SL-draws-down-Chinese-swap-to-close-2021-with-US-3-1bn-foreign-currency-reserves/273-228688#:~:text=A%20few%20days%20before%20the,how%20it%20had%20done%20so.
AID தரவு, https://china.aiddata.org/projects/89457/#:~:text=%27%20Multiple%20sources%20indicate%20that%20the,as%20of%20December%2031%2C%202021.