உண்மைச் சரிபார்ப்புகளும்
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பணிகள் ஏற்றுமதி 69 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன் ICT, விநியோகம், போக்குவரத்து மற்றும் கட்டடவாக்கத் துறைகள் இதற்கு முக்கிய பங்களித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவிக்கின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்றுமதி செயலாற்றுகை அறிக்கை மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சென்மதி நிலுவை புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையிடும் 12 துறைகளில் 5 துறைகளை மட்டுமே EDB பணிகள் ஏற்றுமதிகளுக்காகப் பதிவு செய்கின்றது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). பணிகள் ஏற்றுமதி ஐ.அ.டொ 1.306 பில்லியனால் அதிகரித்துள்ளதை EDB அறிக்கை காட்டுகின்றது. அதாவது 2022 ஆம் ஆண்டில் ஐ.அ.டொ 1.889 பில்லியனில் இருந்து 2023 ஆம் ஆண்டில் ஐ.அ.டொ 3.195 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 69% வளர்ச்சி ஆகும். எனவே ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தரவின் அடிப்படையில் தலைவரின் கூற்று சரியானதாகும்.
EDB தலைவர் குறிப்பிடும் பணிகள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, போக்குவரத்தில் ஏற்பட்ட ஐ.அ.டொ 874 மில்லியன் வளர்ச்சி (மொத்த அதிகரிப்பில் 67%) அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனை அடுத்து கட்டடவாக்கம் மூலம் ஐ.அ.டொ 346 மில்லியன் அதிகரிப்பும் (26%) ICT/BPM மூலம் ஐ.அ.டொ 115 மில்லியன் அதிகரிப்பும் (9%) கிடைக்கப் பெற்றுள்ளன.
பணிகளின் வளர்ச்சிக்கு ICT/BPM துறை குறைந்த பங்களிப்பை வழங்கியுள்ளபோதும், EDB தலைவர் துறைசார் பங்களிப்புகளைக் குறிப்பிடும்போது அதற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார். எனினும் இது அவரது முதன்மையான கூற்றில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
எனவே EDB தலைவரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு 1: இலங்கை மத்திய வங்கி மற்றும் உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளால் உள்ளடக்கப்பட்ட, ஆனால் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அறிக்கையில் உள்ளடக்கப்படாத மேலதிக பணிகளில் பயணம் (சுற்றுலா), காப்புறுதி மற்றும் ஒய்வூதியப் பணிகள், உற்பத்திப் பணிகள், பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள், புலமைச் சொத்தின் பயன்பாட்டிற்கான கட்டணங்கள் மற்றும் பிரத்தியேக, கலாச்சார மற்றும் களியாட்டப் பொழுதுபோக்குப் பணிகள் என்பன அடங்கும்.
இந்த மேலதிக வகைகளை உள்ளடக்கினால் இலங்கையின் பணிகள் ஏற்றுமதி 2022 அம் ஆண்டில் ஐ.அ.டொ 3.1 பில்லியனில் இருந்து 2023 ஆம் ஆண்டில் ஐ.அ.டொ 5.4 பில்லியனாக உயரும். இதன் வளர்ச்சியானது 77% என்பதுடன் இது தலைவர் குறிப்பிடும் பெறுமதியை விட அதிகமாகும். இந்த ஐ.அ.டொ 2.354 பில்லியன் வளர்ச்சிக்கு, ஐ.அ.டொ 932 மில்லியன் பெறுமதியான பயணச் சேவைகள் (மொத்த வளர்ச்சியில் 40%) மற்றும் ஐ.அ.டொ 874 மில்லியன் பெறுமதியான போக்குவரத்து (37%) துறை என்பன முதன்மையான பங்களிப்பை வழங்கியுள்ளன.
மேலதிகக் குறிப்பு 2: 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதும், இலங்கையின் பணிகள் ஏற்றுமதியானது நெருக்கடி நிலைக்கு (2019) முன்னதான மட்டங்களுக்கு இன்னும் திரும்பவில்லை. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய இரண்டின் தரவுகளின் அடிப்படையில் இது உண்மையாக உள்ளது.
மூலம்
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி செயலாற்றுகை குறிகாட்டிகள் 2023.
https://www.srilankabusiness.com/ebooks/export-performance-indicators-of-sri-lanka-2023.pdf
இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள்,
https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector