உண்மைச் சரிபார்ப்புகளும்
(தொடர்ச்சி) …கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) ஓரிரவு ஏலம் மூலம் ரூ.36.16 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது. தவணை ஏலம் மூலமாக கடந்த வாரத்தின் 7 நாட்களுக்குள் ரூ.70 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் (செப்டெம்பர்) மிகையான திரவத்தன்மை ரூ.55.4 பில்லியனால் அதிகரித்துள்ளது.”
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் “பணம் அச்சிடுவதில்” ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிடுகின்றார். இந்தக் கூற்றுக்கு ஆதரவாக, (1) 25 அக்டோபரில் ஓரிரவு ஏலம் மூலமாக ரூ.36.16 பில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது (2) அக்டோபர் 21 முதல் 27 வரையான வாரத்தில் ரூ.70 பில்லியன் தவணை ஏலங்கள் மூலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது (3) கடந்த மாதத்தில் (செப்டெம்பர் 2024) மிகையான திரவத்தன்மையில் ரூ.55.4 பில்லியன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பொருளாதாரத்தில் மொத்த நாணயத் தளத்தை மத்திய வங்கி எவ்வாறு அதிகரிக்கின்றது என்பதை விவரிப்பதற்கு பணம் அச்சிடுதல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது (ஒதுக்குப் பணம் எனவும் இது குறிப்பிடப்படுகின்றது). இது மூன்று கூறுகளைக் கொண்டது:
- புழக்கத்தில் உள்ள பணம்
- வர்த்தக வங்கிகளினால் மத்திய வங்கியில் செய்யப்படும் வைப்புகள்
- அரசாங்க முகவரகங்களினால் மத்திய வங்கியில் செய்யப்படும் வைப்புகள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளைக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை FactCheck.lk மதிப்பிட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு திறந்த சந்தைத் தொழிற்பாடுகளைச் சரியாகக் குறிப்பிடுகின்றார், அவை பல்வேறு காரணங்களுக்காக வர்த்தக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி உதவும் நாளாந்த மற்றும் வாராந்த திரவத்தன்மை உள்ளீடுகள் ஆகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). எனினும் ஒதுக்குப் பணத்தில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது பணம் அச்சிடுவதில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி) திறந்த சந்தைத் தொழிற்பாடுகளால் மட்டுமே இடம்பெறுவதில்லை. அரசாங்கத்திற்கு நேரடியாகக் கடன் வழங்குதல், வெளிநாட்டுச் சொத்துக்கள் கொள்வனவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தேறிய சொத்துக்களைச் சரிசெய்தல் போன்ற வேறு வழிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.
ஒதுக்குப் பணமானது 26 செப்டெம்பர் 2024 இல் ரூ.1,516 பில்லியனில் இருந்து 24 அக்டோபர் 2024 இல் ரூ.1,500 பில்லியனாகக் குறைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவு காட்டுகின்றது. குறித்த காலப்பகுதியில் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மூலமாக ஒதுக்குப் பணம் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், ஏனைய கூறுகள் மூலம் அது குறைக்கப்பட்டுள்ளதை இது சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் ஒதுக்குப் பணத்தில் தேறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று அதிகரிக்கவில்லை.
ஒதுக்குப் பணத்தின் ஒரு அங்கமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மட்டும் கருத்தில் கொண்டு, மொத்தமாக ஒதுக்குப் பணத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் பணம் அச்சிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அந்தக் காலப்பகுதியில் உண்மையில் வீழ்ச்சியடைந்தபோதும் அதிகரித்துள்ளதாகத் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் (OMOகள்) மற்றும் மிகையான திரவத்தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள்
மூலம்
இலங்கை மத்திய வங்கி இணையத்தளம், ‘நாளாந்தத் தொழிற்பாடுகள்: குறிகாட்டிகள்’, https://www.cbsl.lk/eResearch/Modules/RD/SearchPages/Indicators_DailyOperationsNew.aspx [இறுதியாக அணுகியது 10 டிசம்பர் 2024].
இலங்கை மத்திய வங்கி இணையத்தளம், ‘மீள்கொள்வனவு/நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள்’, https://www.cbsl.lk/eResearch/Modules/RD/SearchPages/RepoReverseRepoTransactions.aspx [இறுதியாக அணுகியது 10 டிசம்பர் 2024].
இலங்கை மத்திய வங்கி இணையத்தளம், ‘வாராந்தக் குறிகாட்டிகள்’, https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators [இறுதியாக அணுகியது 10 டிசம்பர் 2024].