மஹிந்த ராஜபக்ஷ

"

எங்களது பொருளாதார முகாமைத்துவமானது தொடர்ச்சியான ஒன்பது ஆண்டு கால பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத்தந்தது. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை […]

எக்கனமிநெக்ஸ்ட் | மே 12, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் (2005 – 2014) (1) தொடர்ச்சியான ஒன்பது ஆண்டு கால பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது (2) கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் தரவு மற்றும் நிதி அமைச்சின் ஆண்டறிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2024 மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர் அறிக்கை 2009 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று (1): “பொருளாதார வளர்ச்சி” என்பது முந்தைய காலப்பகுதியின் சராசரி வளர்ச்சியை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் ஒரு நிலையான காலப்பகுதி எனப் புரிந்துகொள்ள முடியும். 1995 – 2004 வரை, இலங்கையின் சராசரி மொ.உ.உ (GDP) வளர்ச்சி விகிதம் 5.1% ஆகும். 2005 – 2014 வரை சராசரி மொ.உ.உ வளர்ச்சி விகிதம் 6.6% ஆகும். சராசரி வளர்ச்சி விகிதத்தில் இந்தக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு 2005 – 2014 வரை “பொருளாதார வளர்ச்சி” காணப்பட்டது என்ற கூற்றை ஆதரிக்கிறது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).

கூற்று (2): இந்தக் கூற்றை இரண்டு காரணங்களால் ஆதரிக்க முடியாது.

முதலாவது, இலங்கையின் கடன் நிலைமை “சரியான நடவடிக்கைகள் இல்லாத நிலையில்… நீடித்து நிலைக்க முடியாது” என IMF அலுவலர் அறிக்கை 2009 குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் 2009 ஆம் ஆண்டில் துணைநில் ஏற்பாட்டு (SBA) ஒப்பந்தத்தில் இணைந்தது. நாட்டின் கடன்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் காணப்பட்டதை இது சுட்டிக்காட்டுகிறது (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்). அலுவலர் அறிக்கை மற்றும் SBA ஆகிய இரண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கடன்களை நிர்வகிப்பதில் ‘சிரமங்கள்’ காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களாக உள்ளன.

இரண்டாவது, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் குறைவதை பொருளாதார வல்லுனர்கள் குறைந்தது இரண்டு பொருளாதாரக் குறிகாட்டிகளால் தொடர்ச்சியான வீழ்ச்சி அல்லது நிலையாக உள்ளது என அடையாளம் காண்கின்றனர்: (i) வருமானத்தில் வட்டிச் செலவு விகிதம் (வரவு செலவுத்திட்டத்தில் கடன் சேவை அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது), (ii) மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதம் (நாட்டின் கடன் சுமையைக் குறிக்கிறது).

அட்டவணை 1, மேலதிகக் குறிப்புகள் 3 மற்றும் 4 ஆகியவை இந்தக் குறிகாட்டிகள் கூற்றை எவ்வாறு ஆதரிக்கவில்லை என்பதை விளக்குகின்றன. IMF திட்டத்திற்கு முன்னதாக கடன் சுமைகள் ஒரு அல்லது இரண்டு குறிகாட்டிகளிலும் அதிகரித்துள்ளன, திட்டத்தின் போது நிலைப்படுத்தப்பட்டன அல்லது வீழ்ச்சியடைந்தன, அதன் முடிவிற்குப் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளன.

மேற்குறிப்பிட்ட குறிகாட்டிகளில் உள்ள ஏற்ற இறக்கம் மற்றும் 2009 ஆம் ஆண்டில் இலங்கை IMF ஒப்பந்தத்தில் இணைய வேண்டியதன் அவசியம் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் காணப்படவில்லை என்ற கூற்றைக் குறைத்து மதிப்பிடுகிறது.

மொத்தத்தில், 2005 – 2014 காலப்பகுதியை பொருளாதார வளர்ச்சியின் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைத் தரவுகள் ஆதரிக்கின்றன. ஆனால் கடன் சேவைக் கொடுப்பனவில் “எந்தச் சிரமங்களும் இல்லை” என்ற கூற்றை ஆதரிக்கவில்லை.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

 

மேலதிகக் குறிப்பு 1: பரிசீலிக்கப்படும் காலப்பகுதியில் உண்மையான மொ.உ.உ வளர்ச்சி விகிதம் 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டின் சராசரியை விடக் குறைந்துள்ளது என்பதை அட்டவணை 1 காட்டுகிறது. அதிக சராசரியைக் கொண்ட 10 ஆண்டு காலப்பகுதியில் இவை இரண்டு மட்டுமே விதி விலக்குகள் என்பதாலும், அவற்றில் எதுவுமே எதிர்மறை வளர்ச்சியாக இல்லை என்பதாலும் ‘தொடர்ச்சியான’ பொருளாதார வளர்ச்சி என்பது சரியானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

மேலதிகக் குறிப்பு 2: பொதுவாக, எதிர்மறை வர்த்தக நிலுவைகள் மற்றும் கடன் மீள்கொடுப்பனவு அழுத்தங்களால் ஏற்படக்கூடிய சென்மதி நிலுவைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு குறுகிய கால நிதி உதவியை துணைநில் ஏற்பாட்டு ஒப்பந்தம் (SBA) வழங்குகின்றது.

மேலதிகக் குறிப்பு 3: 2005 – 2008 வரை வருமானத்தில் வட்டி விகிதம் நிலையாக அதிகரித்து வந்ததை அட்டவணை 1 காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டில் இது 44.3 சதவீதமாக உச்சத்தை எட்டியது. IMF திட்டத்தின்போது 2009 – 2011 வரை இந்த விகிதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் 2012 ஆம் ஆண்டில் இது மீண்டும் அதிகரித்தது. 2014 ஆம் ஆண்டில் 37.1 சதவீதமாக வீழ்ச்சியடைவதற்கு முன்னதாக 2012 – 2013 இல் இது அதிகரித்தது.

மேலதிகக் குறிப்பு 4: IMF திட்டத்திற்கு முன்னதாக, 2005 – 2007 வரை மொ.உ.உற்பத்தியில் பொதுப்படுகடன் (PD-to-GDP) குறைந்ததை அட்டவணை 1 காட்டுகிறது. ஆனால் IMF திட்டத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், 2012 – 2014 இல் மீண்டும் அதிகரித்தது. 2008 – 2011 வரை மொ.உ.உற்பத்தியில் பொதுப்படுகடன் விகிதம் கிடைக்காத காரணத்தால், இந்தக் காலப்பகுதிக்கு மொ.உ.உற்பத்தியில் மத்திய கடன் விகிதத்தை (CD-to-GDP) இந்த உண்மைச் சரிபார்ப்பு பயன்படுத்தியுள்ளது. இந்த விகிதம் 2008-2009 இல் 4.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2009 – 2012 இல் IMF திட்டக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் IMF திட்டத்திற்குப் பின்னர் 2013 – 2014 இல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

தொடர்ச்சியான தரவுகள் இல்லாத போதும், மொ.உ.உற்பத்தியில் மத்தியக் கடன் விகிதங்களுடன் ஒப்பிடும்போது மொ.உ.உற்பத்தியில் பொதுப்படுகடன் விகிதங்கள் நாட்டின் கடன் சுமையைக் கணக்கிடும் துல்லிய அளவீடாகக் கருதப்படுகிறது. இந்த வேறுபாட்டை முந்தைய உண்மைச் சரிபார்ப்புகள் முன்னிலைப்படுத்தியுள்ளன (பார்க்கவும்: https://factcheck.lk/factcheck/mp-rajapaksa-misrepresents-past-reduction-of-debt-burden)

 

அட்டவணை 1: பேரினப்பொருளாதாரக் குறிகாட்டிகள் (2005 – 2014)



மூலம்

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கைகள், பார்வையிட, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports.

நிதி அமைச்சு, ஆண்டறிக்கை 2014, பார்வையிட, https://www.treasury.gov.lk/api/file/33f4533e-3106-4496-86b3-73f696652e05.

சர்வதேச நாணய நிதியம், ‘IMF நாட்டிற்கான அறிக்கை இல. 09/310, இலங்கை, நவம்பர் 2009, பார்வையிட: https://www.imf.org/external/pubs/ft/scr/2009/cr09310.pdf

சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட தரவுதளம் 2024, பார்வையிட: https://www.imf.org/external/datamapper/NGDP_RPCH@WEO/OEMDC/ADVEC/WEOWORLD

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன