மதுர விதானகே

வருமான இலக்குகளை எட்டுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே சரியாகத் தெரிவித்துள்ளார்

"

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 42.6% வளர்ச்சியாகும். ஆண்டு மதிப்பீட்டில் 44.7% வளர்ச்சியை எங்களால் பெற முடிந்தது. அத்துடன் வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆண்டு மதிப்பீட்டில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளோம்.

பாராளுமன்றம் | ஆகஸ்ட் 7, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (i) வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது, 42.6 சதவீதத்தால் அதிகரித்து ஆண்டு மதிப்பீட்டில் 44.7 சதவீதத்தை எட்டியுள்ளது (ii) வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்து ஆண்டுக்கான இலக்கில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், நிதி அமைச்சின் ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2024 மற்றும் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2024 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

வரி வருமானம்: 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் ரூ.1,709 பில்லியன் என்பதை அட்டவணை 1 காட்டுகின்றது. 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 42.6% அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட ஆண்டு வரி வருமானமான ரூ.3,820 பில்லியனில் இந்தப் பெறுமதி 44.7% என்பதுடன், இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்துகின்றது.

வரியல்லாத வருமானம்: வரியல்லாத வருமானம் என்பது வட்டி வருமானம், வாடகை, அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெறும் இலாபங்கள் மற்றும் பங்கி லாபங்கள் உட்பட பல்வேறு மூலங்களில் இருந்து கிடைக்கப்பெறும் அரச வருமானங்களை உள்ளடக்கியது. இது 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.116 பில்லியனில் இருந்து 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.151 பில்லியனாக 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடான ரூ.324 பில்லியனின் 46.7% ஆகும். இந்தப் பெறுமதியானது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் வரியல்லாத வருமான இலக்கின் எட்டப்பட்ட அளவை விடக் குறைவாகும். பாராளுமன்ற உறுப்பினர் 52.7% எனக் குறிப்பிடுவதற்குக் காரணம், அறிக்கையிடப்பட்ட இலக்கை நிதியமைச்சு ரூ.287 பில்லியனாகத் திருத்தியதே ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதமானது குறைக்கப்பட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் சதவீதமாக சேகரிக்கப்பட்ட வரியல்லாத வருமானம் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்தாத போதும், அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கையின் திருத்தத்தின்போது குறைக்கப்பட்ட பெறுமதியுடன் அது பொருந்துகின்றது.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

அட்டவணை 1: அரசாங்க வரி மற்றும் வரியல்லாத வருமானம் (ரூ. பில்லியன்களில்)

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள்; நிதியமைச்சு, ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2024; நிதியமைச்சு, அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2024

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன