உண்மைச் சரிபார்ப்புகளும்
… சிறுவர்கள் சாப்பிடும் முட்டை ஒன்றின் விலை 12 ரூபாவிலிருந்து ஐந்து மடங்கு அதிகரித்து ரூ.60, 65 ஆக உள்ளது
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார, 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ‘பல’ பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மும்மடங்கு (மும்மடங்கு அதிகரிப்பு என்பது 200% அதிகரிப்பாகும், 300% அதிகரிப்பு அல்ல) அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக முட்டையின் விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் பொருட்களுக்கான வாராந்த சில்லறை விலைகள்: கொழும்பு மாவட்டம்’, ‘உபகுழுக்களுக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) பணவீக்கம்’, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட முதன்மை பணவீக்கம் மற்றும் மத்திய வங்கியின் ‘புறக்கோட்டை சில்லறை விலைகள்’ (RPP) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு உணவல்லா வகைகள், உணவு வகைகள் மற்றும் முட்டைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை FactCheck.lk மதிப்பிட்டது. (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்.)
முதன்மை மற்றும் உணவல்லா வகைகள்: ஜனவரி 2024 இல் முதன்மை பணவீக்கச் சுட்டெண் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கை விட (ஆனால் சுமார் இரண்டு மடங்கு) குறைவாகவே அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவில் 11 உணவல்லா வகைகள் உள்ளன. ஜனவரி 2024 நிலவரப்படி, அவற்றில் எந்தவொன்றும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்மடங்கால் அதிகரிக்கவில்லை.
உணவு வகைகள்: குறித்த காலப்பகுதியில் 107 உணவுப் பொருட்களுக்கான ஒட்டுமொத்த சராசரி சில்லறை விலைகள் தோராயமாக இருமடங்காக அதிகரித்துள்ளதை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத் தரவு காட்டுகிறது. இந்த 107 பொருட்களில் 13 பொருட்களின் விலைகள் மட்டுமே மும்மடங்கால் அல்லது அதை விட அதிகமாக அதிகரித்துள்ளன (அதேவேளை 50 பொருட்களின் விலைகள் இருமடங்கை விட அதிகரித்துள்ளன). இந்த 13 பொருட்களும் பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நுகர்வோர் கூடையில் 1 சதவீதத்தை விடவும் குறைவாகும்.
முட்டைகள்: சராசரியாக முட்டையின் விலை 2020 ஆம் ஆண்டில் ரூ.16.9 இலிருந்து 2024 ஆம் ஆண்டில் ரூ.52.3 ஆக அதிகரித்துள்ளதை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத் தரவு காட்டுகிறது. அதாவது 2.7 மடங்கால் அதிகரித்துள்ளது, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று ஐந்து மடங்கால் அல்ல (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்).
ஆகவே, 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் விலைகள் சுமார் இரண்டு மடங்கால் மட்டுமே அதிகரித்துள்ளன, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று மூன்று மடங்கால் அதிகரிக்கவில்லை என்பதை பொதுவெளியில் கிடைக்கும் தரவு உறுதிப்படுத்துகிறது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று முட்டையின் விலை ஐந்து மடங்கால் அன்றி 2.7 மடங்கால் மட்டுமே அதிகரித்துள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதுமில்லாத அதிகரிப்பைக் குறிப்பிடும் போது பாராளுமன்ற உறுப்பினர் இருமடங்கு அதிகரிப்பை மும்மடங்காகவும் ஐந்து மடங்கு அதிகரிப்பாகவும் மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்.
ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகிறோம்.
மேலதிகக் குறிப்புகள்:
- 2020 ஆம் ஆண்டுக்கான சராசரி சில்லறை விலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனவரி 2020 நான்கு வாரங்களுக்கான சராசரி விலை மற்றும் டிசம்பர் 2020 நான்கு வாரங்களுக்கான சராசரி விலையை FactCheck.lk பயன்படுத்தியுள்ளது. (பல விலைகள் ஜனவரி முதல் டிசம்பர் 2020க்குள் வீழ்ச்சியடைந்துள்ளன). விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மதிப்பிடுவதற்கு இந்தப் பெறுமதியானது பின்னர் ஜனவரி 2024 நான்கு வாரங்களுக்கான சராசரி விலைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
- 2016 மற்றும் 2017 டிசம்பர் 31 ஆம் திகதி முட்டையின் விலை ரூ.13 ஆகக் காணப்பட்டதை RPP தரவு காட்டுகிறது. ஜனவரி 2023 இன் முதல் வாரத்தில் முட்டையின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. அதன் பின்னர் விலை குறைந்துள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் ஐந்து மடங்கு விலை அதிகரிப்பானது கடந்த காலத்தின் வேறொரு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் பொருட்களுக்கான வாராந்த சில்லறை விற்பனை விலைகள் கொழும்பு மாவட்டம், DCS. http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/RetailPrices#gsc.tab=0
CCPI அடிப்படை நிறைகள் (2019) இறுதியாகக் கிடைப்பது, DCS. http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI/BaseWeights2021
உப குழுக்களுக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், DCS (2021=100) மற்றும் (2013=100). http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI/ColomboConsumerPriceIndexby_Subgroups