உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையின் சேமிப்புகள் குறைந்த அளவில் உள்ளதாகவும், இந்தியா மற்றும் சீனாவின் சேமிப்பு அளவுகளை விட பாதியாகவோ குறைவாகவோ உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன வாதம் செய்கின்றார்.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, நிதியமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவுத்திட்ட நிலைப்பாட்டு அறிக்கை மற்றும் உலக வங்கியின் தரவு வங்கியை FactCheck.lk ஆராய்ந்தது.
நிதியமைச்சின் 2023 தரவின் பிரகாரம், இலங்கையின் உள்நாட்டு சேமிப்புகள் மொ.உ.உற்பத்தியின் 23.8 சதவீதமாக உள்ளன. இது 2022 (25%) மற்றும் 2021 (29.4%) ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. உலக வங்கியும் இந்தக் காலப்பகுதிக்கு அதே பெறுமதிகளையே குறிப்பிடுகின்றது. இந்த சேமிப்பு விகிதமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 15% – 20% என்பதை விட அதிகமாக உள்ளது. அத்துடன் உலகளாவிய மற்றும் தெற்காசிய சராசரியான 20% – 22% என்பதை விடவும் அதிகமாகவுள்ளது.
இலங்கையின் சேமிப்புகளை இந்தியா மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் உள்நாட்டு சேமிப்புகள் 2023 ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 29.2 சதவீதமாக உள்ளன என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளை விட அதிகமாகும். அதேபோன்று, 2022 ஆம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டு சேமிப்புகள் மொ.உ.உற்பத்தியில் 46.6 சதவீதமாக உள்ளன. இதுவும் முந்தைய ஆண்டை விட அதிகமாகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த இரண்டு நாடுகளுக்குமான சேமிப்பு விகிதத்தை மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார். இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்தியா மற்றும் சீனாவின் சேமிப்பு விகிதம் முறையே சுமார் 1.2 மற்றும் 2 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் அவர் குறிப்பிடுவது போன்று 2 முதல் 3 மடங்கு அதிகமாக இல்லை.
உண்மையான புள்ளிவிபரங்கள் எதுவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் வரம்புகளில் இல்லை. மேலும் இலங்கையின் குறைந்த சேமிப்பு தொடர்பான கூற்று மற்றும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடனான ஒப்பீடு என்பன தரவுகளால் ஆதரிக்கப்படவில்லை.
எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: இலங்கை, இந்தியா மற்றும் சீனாவின் உள்நாட்டு சேமிப்புகள் 2021 – 2023
மூலம்
நிதியமைச்சு, இறுதி வரவு செலவுத்திட்ட நிலைப்பாட்டு அறிக்கை 2023. https://www.treasury.gov.lk/api/file/ad12f7fa-d2db-43d4-9daa-9270ee7b7cac என்னும் இணைப்பில் இருந்து பெறப்பட்டது.
உலக வங்கி தரவு. https://data.worldbank.org/indicator/NY.GDS.TOTL.ZS என்னும் இணைப்பில் இருந்து பெறப்பட்டது.