பந்துல குணவர்தன

அமைச்சர் குணவர்தன அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்

"

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களில் ரூ.800 பில்லியன் இதுவரை திருப்பிச் செலுத்தப்படவில்லை. (நெடுஞ்சாலைகள் மூலமான) வருடாந்த இலாபம் ரூ.5 பில்லியன் ஆகும்.

பந்துல குணவர்தனவின் ஃபேஸ்புக் கணக்கு | ஏப்ரல் 8, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

…இந்த வகையில் ரூ.5 பில்லியனை நாங்கள் தொடர்ந்து இலாபமாக ஈட்டினாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு எங்களுக்கு 160 ஆண்டுகள் எடுக்கும்.

அதிவேக நெடுஞ்சாலைகளை அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமாக மாற்றி அவற்றை “வர்த்தக நிறுவனங்களாக” இயக்குவதை அமைச்சர் குணவர்தன நியாயப்படுத்துகிறார்: (அ) இந்த அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு ரூ.800 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை இலங்கை கடனாகப் பெற்றுள்ளது (ஆ) தற்போதைய வருடாந்த இலாபங்கள் (ரூ.5 பில்லியன்) மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 160 ஆண்டுகள் எடுக்கும்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆண்டறிக்கை 2021, நிதி அமைச்சின் 2023 ஆண்டறிக்கை மற்றும் இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

நிதி அமைச்சின் பிரகாரம், டிசம்பர் 31, 2023 அன்று அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திக்கான அனைத்து வெளிநாட்டுக் கடன்களின் நிலுவைத்தொகை ரூ.480.3 பில்லியன் ஆகும். அமைச்சர் குறிப்பிடுவது போன்று ரூ.800 பில்லியன் அல்ல (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). அமைச்சர் இந்தக் கடன்களின் ஆரம்ப மொத்தப் பெறுமதியான ஐ.அ.டொ 2,809.48 மில்லியனை (ரூ.843 பில்லியன், ஐ.அ.டொ 1 = ரூ.300) குறிப்பிட்டிருக்கலாம். இதில் ஓரளவு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் மூலம் 2021 ஆம் ஆண்டில் ரூ.4.5 பில்லியன் நிகர வருமானத்தை ஈட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது. இது அமைச்சர் குறிப்பிடும் ரூ.5 பில்லியன் எனும் பெறுமதியுடன் ஓரளவு பொருந்துகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைக்கும் வருடாந்த இலாபங்களைப் பயன்படுத்தி கடன் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டுமானால், கடனைத் திருப்பிச் செலுத்த சுமார் 160 ஆண்டுகள் எடுக்கும் என அமைச்சர் தெரிவிக்கிறார். ரூ.800 பில்லியனை ரூ.5 பில்லியனால் வகுப்பதன் மூலம் அமைச்சர் இந்தப் பெறுமதியைப் பெற்றுள்ளார்.

எனினும், கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான அமைச்சரின் கணக்கீடு இரண்டு வழிகளில் தவறாக உள்ளது. முதலாவது, வருடாந்த இலாபங்கள் தொடர்ந்தும் அதே அளவில் இருக்கும் என அவர் அனுமானிக்கிறார். பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் பயன்பாடு மூலமான சாத்தியமான வளர்ச்சியை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. இது ஆண்டொன்றுக்கு சுமார் 8.5% உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் (எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் 5% மற்றும் மொ.உ.உ வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் மேல்).

இரண்டாவது, கடன் கொடுப்பனவுச் செலவில் வட்டிக் செலவினம் மற்றும் நாணயத் தேய்வு ஆகியவற்றை அவர் தவிர்த்துள்ளார். கடன்களுக்கான வட்டி விகிதம் 2% முதல் 6.3% ஆகும். இலங்கை அதன் பலதரப்பு கடன் வழங்குனர்களுடன் அண்மையில் முன்னெடுத்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தைக் கருத்தில் கொண்டால், கடன் நிலுவை சுமார் 30 சதவீதத்தால் மறுசீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சராசரி வட்டி விகிதம் 3 சதவீதமாக இருக்கும். 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் தேய்மான விகிதத்தையும் கணக்கில் கொண்டால் வட்டிச் செலவினம் சுமார் 8 சதவீதமாக இருக்கும்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் நாணயத் தேய்மானத்திற்குப் பின்னரும் கூட, அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஈட்டப்படும் தற்போதைய வருமானம் வட்டிச் செலவினக் கொடுப்பனவுக்கு (ரூ.480 பில்லியனின் 8 சதவீதமானது சுமார் ரூ.40 பில்லியன் ஆகும்) போதுமானதாக இல்லை என்பதை மேலேயுள்ள பெறுமதிகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரே வழி அதிவேக நெடுஞ்சாலை வருமானத்துடன் திறைசேரியின் ஒருங்கிணைப்பட்ட வருமானத்திலிருந்து நிதியைப் பெறுவதாகும்.

அமைச்சர் தனது வாதத்தை ஆதரிப்பதிலிருந்து விலகிச் செல்கிறார். நிலுவையிலுள்ள கடன் தொகையை ரூ.480 பில்லியனுக்குப் பதிலாக ரூ.800 பில்லியன் எனத் தவறாகக் குறிப்பிடுகிறார். மேலும் நெடுஞ்சாலை வருமானத்தைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கணக்கிடுவதற்கான தர்க்கத்திலும் அவர் தவறிழைக்கிறார். எனினும் இந்தத் தவறுகளைச் சரிசெய்த பின்னரும் கூட, நெடுஞ்சாலை வருமானங்களை மட்டும் பயன்படுத்தி கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சவால் அவர் குறிப்பிடுவதை விட தீவிரமானதாகும். அவரது தவறுகளைத் தவிர்த்து, அமைச்சர் குறிப்பிடும் கருத்து சரியானதாகும்: நெடுஞ்சாலைகளை “வர்த்தக நிறுவனங்களாக” இயக்குவது திறைசேரியின் கடன் சேவைச் சுமையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

ஆகவே நாங்கள் அமைச்சரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிலுவையிலுள்ள கடன் பொறுப்புகள்



மூலம்

நிதி அமைச்சு (MoF) ஆண்டறிக்கை 2023. https://www.treasury.gov.lk/api/file/ad12f7fa-d2db-43d4-9daa-9270ee7b7cac எனும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) ஆண்டறிக்கை 2021. https://www.parliament.lk/uploads/documents/paperspresented/1704795000093592.pdf எனும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன