Claim

உதய கம்மன்பில
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
'(முன்னாள் ஜனாதிபதி சிறிசேன) குற்றம் இழைத்தால் கூட அரசியலமைப்பின் உறுப்புரை 35(1) இன் பிரகாரம் விடுபாட்டுரிமை பெற்றிருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர முடியாது.... அரசியலமைப்பின் உறுப்புரை 35 இனால் வழங்கப்பட்ட குற்றவியல் வழக்குகளுக்கு எதிரான ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையை எந்தவொரு சட்டமும் பறிக்கவில்லை...'
உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ட்விட்டர்: 23 Apr 2020
Statement
'(முன்னாள் ஜனாதிபதி சிறிசேன) குற்றம் இழைத்தால் கூட அரசியலமைப்பின் உறுப்புரை 35(1) இன் பிரகாரம் விடுபாட்டுரிமை பெற்றிருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர முடியாது.... அரசியலமைப்பின் உறுப்புரை 35 இனால் வழங்கப்பட்ட குற்றவியல் வழக்குகளுக்கு எதிரான ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையை எந்தவொரு சட்டமும் பறிக்கவில்லை...'
Fact check
உதய கம்மன்பில ஜனாதிபதி சிறிசேனவிற்கு தவறான விடுபாட்டுரிமையை அளிக்கின்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாபதி மைத்திரிபால சிறிசேன மீது ஏதாவது குற்றஞ்சுமத்தப்பட்டால் அவரை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்குறிப்பிட்ட அறிக்கையினை தொடர் ட்விட்டுக்களாக (கீழே வழங்கப்பட்டுள்ளன) வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்கு, 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னரும், பின்னருமான அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையின் விதிகளை FactCheck ஆராய்ந்தது (அட்டவணை 1).
அரசியலமைப்பின் 35 ஆம் உறுப்புரையின் எளிய உரை பின்வரும் முடிவினை வழங்குகின்றது: இலங்கை ஜனாதிபதிகள் - 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ – அவர்கள் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான விடுபாட்டுரிமைகளும் எப்பொழுதும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் அவர்களுக்கு விடுபாட்டுரிமை இல்லை (அட்டவணை 2, குறிப்பு 1).
மேலும், ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை தொடர்பில் எந்த சட்ட முன்மாதிரியும் அரசியலமைப்பின் எளிய உரையின் வாசிப்பிலிருந்து விலகிச்செல்லவில்லை என்பதை FactCheck தெரிந்துகொண்டது (குறிப்பு 2).
'அரசியலமைப்பின் உறுப்புரை 35 வழங்கிய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையை எந்த சட்டமும் பறிக்கவில்லை' என்ற கம்மன்பிலவின் கூற்று தவறானது அல்ல. எனினும், இது அவருடைய கூற்றுக்கு பொருத்தமற்றது, ஏனென்றால் இல்லாத ஒன்றை பறிக்க முடியாது. ஜனாதிபதி சிறிசேன சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுபாட்டுரிமையை தற்போது அனுபவிக்கின்றார் என கம்மன்பில தவறாகத் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதியாக இல்லாத சந்தர்ப்பத்தில் அவருடைய விடுபாட்டுரிமையை பறிப்பதற்கு எந்த சட்டமும் தேவை இல்லை என இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதிகளுக்கு அவர்கள் பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும் - அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் சட்டம் எப்பொழுதும் விடுபாட்டுரிமையை அளிக்கவில்லை.
எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை நாங்கள் 'தவறானது' என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
* அட்டவணை 2 க்கான குறிப்பு:
உறுப்புரை 35(3) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டு அல்லது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அல்லது மக்கள் தீர்ப்பொன்றின் செல்லுபடியாகுந்தன்மை தொடர்பிலான சில செயல்கள்/விசாரணைகளைத் தவிர அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அட்டவணை 2 குறிப்பிடுகின்றது - 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு முன்னரும், பின்னரும் ஜனாதிபதி கடமையில் இருக்கும் போது இவற்றில் இருந்து விடுபாட்டுரிமை கிடையாது. ஜனாதிபதி கடமையில் இருந்து விலகிய பின்னரும் இந்த விடுபாட்டுரிமை இல்லை. இவற்றுக்கும் இந்த உண்மை சரிபார்ப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கடமையில் இருக்கும் போது அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு விடுபாட்டுரிமை இல்லை என்பது தொடர்பில் 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரான நிலைப்பாடு குறித்து அட்டவணை 2 இல் உள்ளடக்கப்படவில்லை. 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் உறுப்புரை 35(3) இன் கீழ் இந்த விடுபாட்டுரிமை வழங்கப்பட்டது. இந்த விடயமும் இந்த உண்மை சரிபார்ப்பிற்கு தொடர்பற்றது.
குறிப்பு 1:
எனினும், உறுப்புரை 33(2)(எ) இன் கீழ் ‘போர் மற்றும் சமாதானத்தை பிரகடனம் செய்வதற்கான’ ஜனாதிபதியின் அதிகாரம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்குப் பின்னர் உறுப்புரை 35(1) இன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகார வரம்பிலிருந்து விடுபடுகின்றது. இந்த அதிகாரம் (ஜனாதிபதி சிறிசேனவினால் இது எப்பொழுதும் பயன்படுத்தப்படவில்லை – அல்லது இதுவரை பதவியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியினாலும்) மற்றும் அதற்கான விடுபாட்டுரிமை இந்த உண்மைச் சரிபார்ப்பிற்கு பொருத்தமற்றது. அதேபோன்று, அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளவை மற்றும் குற்றவியல் மற்றும்/ அல்லது குடியியல் நடவடிக்கைகளுக்கான விடுபாட்டுரிமை தொடர்பிலான இந்த உண்மைச் சரிபார்ப்பானது, ‘போர் அல்லது சமாதானத்தை பிரகடனம்’ செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலான எந்தவொரு சட்டநடவடிக்கை தொடர்பிலும் உள்ளடக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பு 2:
(அ) பின்வரும் இரண்டு அனுமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(i) பொருத்தமான அரசியலமைப்பின் சட்ட விதிகள் தெளிவாகவும், ஒரேயொரு அர்த்தத்தினை தரும் போது, சட்ட விளக்கமோ அல்லது நீதிமன்றத்தின் விளக்கமோ தேவையில்லை; மற்றும்
(ii) வெளிப்படையான அர்த்தத்திற்கு முரணாண எந்தவொரு கூற்றும் நம்பத்தகுந்த வகையில் நிரூபிக்கப்படாவிட்டால் சரியானதாக ஏற்றுக்கொள்ள முடியாது.
(ஆ) ஜனாதிபதி சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது அத்துடன் பதவிக்காலம் முடிந்த பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும், குற்றவியல் மற்றும் குடியியல் சட்ட நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி விதிவிலக்கு அல்ல என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் தெளிவாக வலியுறுத்துகின்றன.