Claim

உதய கம்மன்பில
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத் தவிர்த்து வேறு சொற்கள் உள்ளடக்கப்பட்டு அது தேசிய கீதமாகக் கருதப்பட்டால், அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
அத: 1 Jan 2020
Statement
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத் தவிர்த்து வேறு சொற்கள் உள்ளடக்கப்பட்டு அது தேசிய கீதமாகக் கருதப்பட்டால், அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
Fact check
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய கீதம் குறித்து தவறாகத் தெரிவிக்கின்றார்
சிங்களத்தை தவிர வேறு மொழிகளில் தேசிய கீதத்தை இசைப்பது அரசியலமைப்பை மீறும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். ஏனென்றால் அரசியலமைப்பின் சரத்து 7 இல் தேசிய கீதம் சிங்களத்தில் ‘ஸ்ரீலங்கா மாதா’ என குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு அரசியலமைப்பினை FactCheck ஆராய்ந்தது. உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்பின் பதிப்புக்களில் தேசிய கீதத்தின் பெயர் மற்றும் சொற்கள் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ‘ஸ்ரீலங்கா மாதா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் ‘ஸ்ரீலங்கா தாயே’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பில் தேசிய கீதம் ‘ஸ்ரீலங்கா மாதா’ என மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தவறு.
இதனை ஆராய்வதற்கு நாங்கள் அரசியலமைப்பின் மூன்று விடயங்களைக் கவனத்தில் கொண்டோம்: (1) இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் தேசிய மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளாக சமமான அரசியலமைப்பு அந்தஸ்தைக் கொண்டுள்ளன. (2) அரசியலமைப்பானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. (3) அரசியலமைப்பு எந்தவொரு மொழிக்கும் அல்லது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பதிப்பிற்கும் அதன் விளக்கம் அல்லது பயன்பாட்டிற்கு முன்னுரிமை வழங்காது.
இந்த உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினரின் தர்க்கம் சரியானதாக இருந்தால், ஒருவர் தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு மாத்திரமே அரசியலமைப்பு என சம உரிமை கோரமுடியும் - ஏனென்றால் அரசியலமைப்பில் தேசிய கீதம் ‘ஸ்ரீலங்கா தாயே’ என தமிழில் உள்ளது, அத்துடன் தேசிய மற்றும் உத்தியோகபூர்வ மொழியான தமிழில் அரசியலமைப்பு எழுதப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்குகின்றது.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் கூற்றினை ‘தவறு’ என வகைப்படுத்துகின்றோம்.
கவனத்தில் கொள்ளவும்: இருவேறு மொழிகளில் அரசியலமைப்பில் எழுதப்பட்டவற்றின் பொருள் வேறுபட்டால் மாத்திரமே ஒரு மொழியில் அரசியலமைப்பை விளக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்றம் மாத்திரமே எது சரியான விளக்கம் என்பதை தீர்மானிக்கக்கூடிய அரசியலமைப்பின் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் தேசிய கீதத்தின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புக்கள் ஒரே கருத்தினைக் கொண்டுள்ளதுடன், ஒரே இசையமைப்பையே பரிந்துரைக்கின்றன.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
Sources
மூலம்:
இலங்கை பாராளுமன்றம், இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அதன் 19 திருத்தங்களையும் உள்ளடக்கியது, சரத்து 7, 18, 19 மற்றும் 125, பார்வையிட:
https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-19th.pdf (ஆங்கிலத்தில்);
https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-19th-si.pdf (சிங்களத்தில்);
https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-19th-ta.pdf (தமிழில்)
அசல் அறிக்கையைப் பார்வையிட: http://www.ada.lk/breaking_news/රාජ්%E2%80%8Dය-උත්සවයකදී-ජාතික-ගීතය-දෙමළ-භාෂාවෙන්-ගායනා-කිරීම-ව්%E2%80%8Dයවස්ථාව-උල්ලංඝණය-කිරීමක්/11-356263