Claim

மஹிந்த ராஜபக்க்ஷ
இலங்கை பிரதமர்
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் யஹபாலனய (நல்லாட்சி) அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
அருண: 29 Jun 2020
Statement
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் யஹபாலனய (நல்லாட்சி) அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
Fact check
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ: காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் காணாமல் போன உண்மைகள்
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் முன்னாள் அரசாங்கத்தினால் வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அவரது அறிக்கையில், இந்த வலுக்கட்டாயமான நடைமுறைப்படுத்தலில் எதிர்ப்பினை அல்லது கருத்து வேறுபாட்டினைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என பிரதமர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு பாராளுமன்ற விவாதங்கள் தொடர்பில் பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் ஹன்சாட், ஒழுங்கு பத்திரங்கள் மற்றும் பாராளுமன்ற நிலையியற்கட்டளைகள் போன்ற நடைமுறைகளையும் FactCheck ஆராய்ந்தது.
சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பிற்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஏகமனதான ஒப்புதலுடன் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் அங்கிருந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
சட்டமூலம் இறுதி வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவதற்கு முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய பாராளுமன்ற விவாதம் மற்றும் ஒப்புதலுக்கான வழமையான நான்கு கட்ட செயற்பாடுகள் பின்பற்றப்பட்டன:
- சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலாவது வாசிப்பு இடம்பெற்றது, அதன் பின்னர் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றம் குறிப்பிட்டது.
- துறைசார் மேற்பார்வைக் குழு - இது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கியது – சட்டமூலத்தை ஆராய்ந்து அதில் திருத்தங்களை மேற்கொண்டது.
- இரண்டாவது வாசிப்பில், இந்த சட்டமூலம் மேலும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஒரு குழுவாக அமர்ந்து’ அதனை திருத்தியதுடன் மூன்றாவது வாசிப்புக்கு அனுமதியளித்தனர்.
- மூன்றாவது வாசிப்பில் எதிர்க்கட்சியினர் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு காணப்பட்ட போதும், பொருத்தமான நிலையியற் கட்டளைகளை பயன்படுத்தவில்லை.
இந்த உண்மைகள் வெளிப்படுத்துவது என்னவென்றால்: (1) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் ஏகமனதான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது (2) உரிய நடைமுறை முறையாக பின்பற்றப்பட்டுள்ளது, எதிர்த்தரப்பினர் கருத்துக்களை தெரிவிப்பதற்கும், சேர்த்துக்கொள்ளவதற்கும் போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, மற்றும் (3) நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் விவாதத்தின் இரண்டு கட்டங்களில் சட்டமூலம் திருத்தப்பட்டுள்ளது – துறைசார் மேற்பார்வைக் குழு கலந்துரையாடல் மற்றும் பாராளுமன்ற விவாதம். இந்த உண்மைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் எதிர்த்தரப்பு கருத்துக்கள் கேட்கப்படாமல் வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற கூற்றுக்கு ஆதரவளிக்கவில்லை.
எனவே பிரதமர் ராஜபக்க்ஷவின் கூற்றினை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
Sources
22 ஜுன் 2016 பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்), பார்வையிட, https://www.parliament.lk/uploads/documents/hansard/1467092257039111.pdf [last accessed 2 September 2020]
11 ஓகஸ்ட் 2016 பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்), பார்வையிட, https://www.parliament.lk/uploads/documents/hansard/1471839745010304.pdf [last accessed 2 September 2020]
பொருளாதார அபிவிருத்தி துறைசார் மேற்பார்வைக் குழு, ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம் தொடர்பான பொருளாதார அபிவிருத்தி துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை (10 ஓகஸ்ட் 2016), https://parliament.lk/uploads/comreports/1479286790086814.pdf#page=1 [last accessed 2 September 2020]
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், பார்வையிட, https://www.parliament.lk/files/pdf/standing-orders-en.pdf [last accessed 2 September 2020]
அததெரண, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார் (23 ஓகஸ்ட் 2016), பார்வையிட: http://www.adaderana.lk/news.php?mode=beauti&nid=36626 [last accessed 2 September 2020]