
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் FactCheck.lk தொடர்பான அறிக்கை, 2020 மே 15 ஆம் திகதி ‘அத தெரண’வின் முதன்மைச் செய்தி அறிக்கையில் ஒளிபரப்பப்பட்டது. FactCheck.lk இன் உண்மை சரிபார்க்கும் முறை மற்றும் இதற்கு முன்னரான உண்மைச் சரிபார்ப்புக்கள் தவறானது என்ற கம்மன்பிலவின் அறிக்கை குறித்து நாங்கள் வருந்துகின்றோம்.
பொதுமக்களுக்கு பொருத்தமானதும், முக்கியமானதுமான விடயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் முன்வைக்கும் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே ஒன்லைன் தளமான FactCheck.lk இன் நோக்கமாகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட மற்றும் பலர், அவர்கள் தொடர்பாக நாங்கள் வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்புக்கள் குறித்து ஆக்கபூர்வமாக எங்களுடன் கலந்துரையாடி நாங்கள் விவாதித்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள உரையாடல்களை முன்னெடுப்பதற்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதை நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பொதுமக்களுக்கு பொருத்தமானதும், முக்கியமானதுமான விடயங்களில் அவர்கள் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இந்த உண்மைச் சரிபார்ப்புக்கள் வாய்ப்புக்களை அதிகரிக்கின்றன. மேலும், நாட்டில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய பதவியில் இருப்பவர்கள் தாங்கள் முன்வைக்கும் அறிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவதற்கும், மிகச் சரியான விடயங்களை முன்வைப்பதற்கும் இது உதவுகின்றது.
கம்மன்பில தனது அறிக்கையில் முன்வைத்த விடயங்களைக் கருத்தில் கொள்ளும் போது, FactCheck.lk ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜனாதிபதி தேர்தல்கள் நிறைவுக்கு வந்தது வரை, அதாவது 2019 நொவம்பர் 16 ஆம் திகதி வரை ‘நல்லாட்சிக்கு எதிரான’ குழுவினர் முன்வைத்த எந்த அறிக்கைகளும் FactCheck.lk இனால் ‘உண்மையானது’ என வகைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார். எனினும், 2019 செப்டெம்பர் 02 ஆம் திகதி திவயின பத்திரிகையில் வெளியான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிக்கையை FactCheck.lk ‘உண்மையானது’ என வகைப்படுத்தியுள்ளது. ( http://www.factcheck.lk/claim/mahinda-rajapaksa-7)
FactCheck.lk இனால் ‘தவறானது’ என வகைப்படுத்தப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்த அறிக்கைகள் முக்கியமற்றவை என கம்மன்பில மேலும் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வெளியிட்ட பொதுமக்களுக்கு முக்கியமான மற்றும் பொருத்தமான - சிகரட் விற்பனையில் வரிக்கொள்கை ( http://www.factcheck.lk/claim/mangala-samaraweera-6), நாட்டில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு ( http://www.factcheck.lk/claim/sagala-ratnayaka), இலங்கையின் தனிநபர் வருமானம் மற்றும் பிராந்திய தரவரிசைப் பட்டியல் ( http://www.factcheck.lk/claim/patali-champika-ranawaka-2), அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் கடன் ( http://www.factcheck.lk/claim/patali-champika-ranawaka-4), பயங்கரவாதிகளை கைது செய்வதற்கு இலங்கையில் உள்ள சட்ட விதிகள் ( http://www.factcheck.lk/claim/ranil-wickremesinghe-2) உள்ளிட்ட பல அறிக்கைகள் ‘தவறானவை’ என FactCheck.lk இனால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாங்கள் ‘சரியான தகவல்களை தவறானவை என சித்தரித்துள்ளதாக’ கம்மன்பில தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யாரேனும் ஒருவருடைய அறிக்கையை நாங்கள் சரிபார்த்த பின்னர் இறுதியாக வகைப்படுத்தியது நியாயமற்றது அல்லது தவறானது என எவரேனும் நம்பினால், அவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது பதிலை வழங்குவதற்கான வாய்ப்பு மற்றும் உரிமை உள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மேலும், நாங்கள் பிரசுரிக்கும் ஒவ்வொரு உண்மைச் சரிபார்ப்புக்களுடனும் இதனை சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, FactCheck.lk வாயிலாக நாங்கள் பிரசுரித்த எந்த உண்மைச் சரிபார்ப்பும், வகைப்படுத்தலும் உண்மையான தகவல்களை தவறாக சித்தரித்திருப்பதாக கருதினால், கம்மன்பில இது தொடர்பாக உடனடியாக எங்களுக்கு அறியத்தருமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். இதுவரையில் கம்மன்பிலவின் ஐந்து அறிக்கைகளை நாங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளோம், அத்துடன் அவற்றை ‘தவறானது’, ‘முற்றிலும் பொய்யானது’, ‘பகுதியளவில் உண்மை’ என வகைப்படுத்தியுள்ளோம். எங்களது வகைப்படுத்தலில் தவறு உள்ளதாக கருதினால், கம்மன்பில நாங்கள் வழங்கியிருக்கும் ‘பதிலளிப்பதற்கான உரிமையை’ பயன்படுத்த முடியும். எங்களிடம் முன்வைக்கப்படும் வாதங்கள் மற்றும்/அல்லது தகவல்களை மீளாய்வு செய்து, எங்களுடைய உண்மைச் சரிபார்ப்புக்கள் மாற்றப்பட வேண்டி இருந்தால், அவ்வாறான உண்மைச் சரிபார்ப்புக்களை மாற்றுவதற்கு நாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்போம்.
FactCheck.lk இனால் சரிபார்க்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் அறிக்கைகள்
http://factcheck.lk/claim/udaya-gammanpila-immunity
http://factcheck.lk/claim/udaya-gammanpila-12
http://factcheck.lk/claim/udaya-gammanpila-9
http://factcheck.lk/claim/udaya-gammanpila-5
http://factcheck.lk/claim/udaya-gammanpila-2